குறள் (Kural) - 1166

குறள் (Kural) 1166
குறள் #1166
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.

பொருள்
காதல் இன்பம் கடல் போன்றது காதலர் பிரிவு ஏற்படுத்தும் துன்பமோ, கடலைவிடப் பெரியது.

Tamil Transliteration
Inpam Katalmatruk Kaamam Aqdhatungaal
Thunpam Adhanir Peridhu.

மு.வரதராசனார்

காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது; அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது.

சாலமன் பாப்பையா

காதல் மகிழ்ச்சி கடல்போலப் பெரிது; ஆனால் பிரிவினால் அது துன்பம் செய்யத் தொடங்கிவிட்டால் அத்துன்பம் கடலைக் காட்டிலும் பெரிது.

கலைஞர்

காதல் இன்பம் கடல் போன்றது. காதலர் பிரிவு ஏற்படுத்தும் துன்பமோ, கடலைவிடப் பெரியது.

பரிமேலழகர்

('காமத்தான் இன்பமுற்றார்க்கு அதனினாய துன்பமும் வரும்', என்ற தோழிக்குச் சொல்லியது.) காமம் இன்பம் கடல் - காமம் புணர்வால் இன்பஞ்செய்யுங்கால் அவ்வின்பம் கடல் போலப் பெரிதாம்; மற்று அஃது அடுங்கால் துன்பம் அதனிற் பெரிது - இனி அது தானே பிரிவால் துன்பஞ் செய்யுங்கால், அத்துன்பம் அக்கடலினும் பெரிதாம். ('மற்று' வினைமாற்றின்கண் வந்தது. 'அடுங்கால்' என வந்தமையின், மறுதலை யெச்சம் வருவிக்கப்பட்டது. பெற்ற இன்பத்தோடு ஒத்து வரின் ஆற்றலாம்; இஃது அதனது அளவன்று என்பது கருத்து.)

புலியூர்க் கேசிகன்

காம இன்பமானது அநுபவிக்கும் போது கடலளவு பெரிதாயுள்ளது; ஆனால், பிரிவுத் துன்பத்தால் வருத்தும் போது, அவ்வருத்தம் கடலை விடப் பெரிதாக உள்ளதே!

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)படர்மெலிந் திரங்கல் (Patarmelindhirangal)