குறள் (Kural) - 1165

குறள் (Kural) 1165
குறள் #1165
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.

பொருள்
நட்பாக இருக்கும்போதே பிரிவுத்துயரை நமக்குத் தரக்கூடியவர், பகைமை தோன்றினால் எப்படிப்பட்டவராய் இருப்பாரோ?.

Tamil Transliteration
Thuppin Evanaavar Mankol Thuyarvaravu
Natpinul Aatru Pavar.

மு.வரதராசனார்

( இன்பமான) நட்பிலேயே துயரத்தை வரச் செய்வதில் வல்லவர். ( துன்பம் தரும் பகையை வெல்லும்) வலிமை வேண்டும்போது என்ன ஆவாரோ?.

சாலமன் பாப்பையா

இன்பம் தருவதற்குரிய நட்பிலேயே துன்பத்தைத் தரம் இவர், பகைமையில் என்னதான் செய்வாரோ?.

கலைஞர்

நட்பாக இருக்கும்போதே பிரிவுத்துயரை நமக்குத் தரக்கூடியவர், பகைமை தோன்றினால் எப்படிப்பட்டவராய் இருப்பாரோ?.

பரிமேலழகர்

(தூது விடாமை நோக்கித் தோழியோடு புலந்து சொல்லியது) நட்பினுள் துயர் வரவு ஆற்றுபவர் - இன்பஞ்செய்தற்குரிய நட்பின்கண்ணே துன்பவரவினைச் செய்ய வல்லவர்; துப்பின் எவனாவர் கொல் - துன்பம் செய்தற்குரிய பகைமைக்கண் என் செய்வர் கொல்லோ? (துப்புப் பகையுமாதல், 'துப்பெதிர்ந்தோர்க்கே யுள்ளாச் சேய்மையன் நட்பெதிர்ந் தோர்க்கே அங்கை யண்மையன்' (புறநா.380) என்பதனானும் அறிக. அப்பகைமை ஈண்டுக் காணாமையின், 'அவர் செய்வது அறியப் பெற்றிலேம்' என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது. துயர் வருதலை விலக்கலாயிருக்க அது செய்கின்றிலை எனப் புலக்கின்றமையின், துயர் வரவு செய்தாளாக்கியும் பிறளாக்கியும் கூறினாள்.)

புலியூர்க் கேசிகன்

இனிமையான நட்புடைய நம்மிடையே துன்பத்தைச் செய்யும் நம் காதலர், பகையை வெல்வதற்கான வலிமை வேண்டும் போது என்னதான் செய்வாரோ?

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)படர்மெலிந் திரங்கல் (Patarmelindhirangal)