குறள் (Kural) - 1148

குறள் (Kural) 1148
குறள் #1148
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்.

பொருள்
ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வு அடங்குவது என்பது, எரிகின்ற தீயை நெய்யை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்வதைப் போன்றதாகும்.

Tamil Transliteration
Neyyaal Erinudhuppem Endratraal Kelavaiyaal
Kaamam Nudhuppem Enal.

மு.வரதராசனார்

அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.

சாலமன் பாப்பையா

இந்த ஊரார் தங்கள் அலரால் எங்கள் காதலை அழித்து விடுவோம் என்று எண்ணுவது, நெய்யை ஊற்றியே நெருப்பை அணைப்போம் என்பது போலாம்.

கலைஞர்

ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வு அடங்குவது என்பது, எரிகின்ற தீயை நெய்யை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்வதைப் போன்றதாகும்.

பரிமேலழகர்

(இதுவும் அது.) கௌவையால் காமம் நுதுப்பேமெனல் - ஏதிலார் எடுக்கின்ற அலரால் நாம் காமத்தை அவித்தும் என்று கருதுதல்; நெய்யால் எரி நுதுப்பேம் என்றற்று - நெய்யால் எரியை அவித்தும் என்று கருதலோடு ஒக்கும். (மூன்றனுருபுகள் கருவிக்கண் வந்தன. கிளர்தற் காரணமாய அலரால் அவித்தல் கூடாது என்பதாம்.)

புலியூர்க் கேசிகன்

‘பழிச்சொல்லால் காமத்தைத் தணித்துவிடுவோம்’ என்று முயலுதல், ‘நெய்யால் நெருப்பை அவிப்போம்’ என்பது போன்ற அறியாமைச் செயலாகும்

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)களவியல் (Kalaviyal)
அதிகாரம் (Adhigaram)அலர் அறிவுறுத்தல் (Alararivuruththal)