குறள் (Kural) - 1149

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.
பொருள்
உன்னை விட்டுப் பிரியேன் அஞ்ச வேண்டாம் என்று உறுதியளித்தவர் பலரும் நாணும்படியாக என்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்கும் போது நான் மட்டும் ஊரார் தூற்றும் அலருக்காக நாண முடியுமா?.
Tamil Transliteration
Alarnaana Olvadho Anjalompu Endraar
Palarnaana Neeththak Katai.
மு.வரதராசனார்
அஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ.
சாலமன் பாப்பையா
அலர் பேசிய பலரும் வெட்கப்படும்படி இன்று அவர் என்னை விட்டுப் போகும்போது, பயப்படாதே, உன்னைப் பிரியேன் என்று சொல்லிவிட்டார். இனிப் பலரும் பேசும் பேச்சுக்கு நான் வெட்கப்படலாமா?.
கலைஞர்
உன்னை விட்டுப் பிரியேன் அஞ்ச வேண்டாம் என்று உறுதியளித்தவர் பலரும் நாணும்படியாக என்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்கும் போது நான் மட்டும் ஊரார் தூற்றும் அலருக்காக நாண முடியுமா?.
பரிமேலழகர்
(வரைவிடை வைத்துப் பிரிவின்கண் ஆற்றாளாய தலைமகள். அவன் வந்து சிறைப்புறத்தானாதல் அறிந்து, 'அலரஞ்சி ஆற்றல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது.) அஞ்சல் ஒம்பு என்றார் பலர் நாண நீத்தக் கடை - தம்மை எதிர்ப்பட்ட ஞான்று 'நின்னிற் பிரியேன் அஞ்சல் ஒம்பு' என்றவர் தாமே இன்று கண்டார் பலரும் நாணும் வகை நம்மைத் துறந்த பின்; அலர் நாணா ஒல்வதோ - நாம் ஏதிலார் கூறும் அலருக்கு நாணக் கூடுமோ? கூடாது. ('நாண' என்னும் வினையெச்சம் 'ஒல்வது' என்னும் தொழிற் பெயருள் ஒல்லுதல் தொழிலோடு முடிந்தது. 'கண்டார் நாணும் நிலைமையமாய யாம் நாணுதல் யாண்டையது'? என்பதாம்.)
புலியூர்க் கேசிகன்
‘அஞ்சாதே! பிரியேன்’ என்று என்னைத் தெளிவித்துக் கூடியவர், இந்நாள் பலரும் நாண நம்மைக் கைவிட்டுப் போனபோது, அவருக்கு நாணவும் நம்மால் இயலுமோ!
பால் (Paal) | காமத்துப்பால் (Kaamaththuppaal) |
---|---|
இயல் (Iyal) | களவியல் (Kalaviyal) |
அதிகாரம் (Adhigaram) | அலர் அறிவுறுத்தல் (Alararivuruththal) |