குறள் (Kural) - 1147

குறள் (Kural) 1147
குறள் #1147
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.

பொருள்
ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலானது ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும் அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாது.

Tamil Transliteration
Ooravar Kelavai Eruvaaka Annaisol
Neeraaka Neelumin Noi.

மு.வரதராசனார்

இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.

சாலமன் பாப்பையா

இந்த ஊர்ப் பெண்கள் பேசும் பேச்சே உரமாக தாயின் தடைச்சொல் நீராக என் காதல் பயிர் வளரும்.

கலைஞர்

ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலானது ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும் அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாது.

பரிமேலழகர்

(வரைவு நீட ஆற்றாளாய தலைமகளைத் தலைமகன் சிறைப்புறத்தானாதல் அறிந்த தோழி, ஊரவர் அலரும் அன்னை சொல்லும் நோக்கி ஆற்றல் வேண்டும் எனச் சொல்லெடுப்பியவழி அவள் சொல்லியது.) இந்நோய் - இக்காம நோயாகிய பயிர்; ஊரவர் கௌவை எருவாக அன்னை சொல் நீராக நீளும் - இவ்வூரின் மகளிர் எடுக்கின்ற அலர் எருவாக அது கேட்டு அன்னை வெகுண்டு சொல்லுகின்ற வெஞ்சொல் நீராக, வளராநின்றது. ('ஊரவர்' என்பது தொழிலான் ஆணொழித்து நின்றது. ஏக தேச உருவகம். சுருங்குதற்கு ஏதுவாவன தாமே விரிதற்கு ஏதுவாக நின்றன என்பதாம். வரைவானாதல் பயன்.)

புலியூர்க் கேசிகன்

இக் காமநோயானது, ஊரவர் சொல்லும் பழிச் சொற்களை எருவாகவும், அது கேட்டு அன்னை சொல்லும் கடுஞ்சொல்லை நீராகவும் கொண்டு வளர்கின்றது

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)களவியல் (Kalaviyal)
அதிகாரம் (Adhigaram)அலர் அறிவுறுத்தல் (Alararivuruththal)