குறள் (Kural) - 1146

குறள் (Kural) 1146
குறள் #1146
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.

பொருள்
காதலர் சந்தித்துக் கொண்டது ஒருநாள்தான் என்றாலும், சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்படும் ``கிரகணம்'' எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர் முழுவதும் அலராகப் பரவியது.

Tamil Transliteration
Kantadhu Mannum Orunaal Alarmannum
Thingalaip Paampukon Tatru.

மு.வரதராசனார்

காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது.

சாலமன் பாப்பையா

நான் அவரைப் பார்த்ததும் பேசியதும் கொஞ்சமே! ஆனால் இந்த ஊரார் பேச்சோ நிலவைப் பாம்பு பிடித்ததுபோல் ஊர் முழுக்கப் பரவிவிட்டதே!.

கலைஞர்

காதலர் சந்தித்துக் கொண்டது ஒருநாள்தான் என்றாலும், சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்படும் யயகிரகணம்(( எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர் முழுவதும் அலராகப் பரவியது.

பரிமேலழகர்

(இடையீடுகளானும் அல்ல குறியானும் தலைமகனை எய்தப்பெறாத தலைமகள், அவன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய் அலரறிவுறீஇ வரைவு கடாயது.) கண்டது ஒரு நாள் - யான் காதலரைக் கண்ணுறப்பெற்றது ஒரு ஞான்றே; அலர் திங்களைப் பாம்பு கொண்டற்று -அதனினாய அலர் அவ்வளவிற்றன்றித் திங்களைப் பாம்பு கொண்ட அலர் போன்று உலகமெங்கும் பரந்தது. (காரியத்தைக் காரணமாக உபசரித்து, 'பாம்பு கொண்டற்று' என்றாள். இருவழியும் மன்னும், உம்மையும் அசைநிலை. 'காட்சியின்றியும் அலர் பரக்கின்ற இவ்வொழுக்கம் இனியாகாது, வரைந்து கோடல் வேண்டும்', என்பதாம்.)

புலியூர்க் கேசிகன்

அவரைக் கண்டது எல்லாம் ஒரே ஒரு நாள் தான்; திங்களைப் பாம்பு கொண்டது எங்கும் பரவினாற் போல, ஊரலரும் அதற்குள் எங்கும் வெளிப்பட்டுப் பரவிவிட்டதே

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)களவியல் (Kalaviyal)
அதிகாரம் (Adhigaram)அலர் அறிவுறுத்தல் (Alararivuruththal)