குறள் (Kural) - 113

குறள் (Kural) 113
குறள் #113
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.

பொருள்
நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்.

Tamil Transliteration
Nandre Tharinum Natuvikandhaam Aakkaththai
Andre Yozhiya Vital.

மு.வரதராசனார்

தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நி‌லைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.

சாலமன் பாப்பையா

நன்மையே தருவதாக இருந்தாலும் நீதியை விட்டு விலகுவதால் வரும் லாபத்தை, அப்பொழுதே விட்டு விடுக.

கலைஞர்

நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்.

பரிமேலழகர்

நன்றே தரினும் - தீங்கு அன்றி நன்மையே பயந்ததாயினும்; நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை அன்றே ஒழியவிடல் -நடுவு நிற்றலை ஒழிதலான் உண்டாகின்ற ஆக்கத்தை அப்பொழுதே ஒழிய விடுக. (நன்மை பயவாமையின் நன்றே தரினும் என்றார். இகத்தலான் என்பது இகந்து எனத் திரிந்து நின்றது. இவை இரண்டு பாட்டானும் முறையே நடுவு நிலைமையான் வந்த செல்வம் நன்மை பயத்தலும், ஏனைச்செல்வம் தீமை பயத்தலும் கூறப்பட்டன.)

ஞா.தேவநேயப் பாவாணர்

நன்றே தரினும்-அறவழியில் வந்த செல்வம் போல் நன்மையே விளைப்பினும்; நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல்-நடுவுநிலை திறம்புவதால் வரும் செல்வத்தை அப்பொழுதே விட்டு விடுக. நன்மை தராமையின் 'நன்றே தரினும்' என்பது எதிர்மறை யும்மை தன்னை மட்டுமன்றித் தன் எச்சத்தையுந் தாக்குமாதலின், 'அன்றேயொழிய விடல்' என்றார். விடல் என்பது அல்லீற்று வியங்கோள்.

மணக்குடவர்

பெருமையே தரினும் நடுவுநிலைமையை நீங்கி வரும் ஆக்கத்தை அவ்வாக்கம் வருதற்குத் தொடக்கமான அன்றே யொழிய விடுக.

புலியூர்க் கேசிகன்

நன்மையே தருவது என்றாலும், நடுவுநிலைமை தவறுதலால் வருகின்ற வளத்தை, அப்போதே உள்ளத்திலிருந்து போக்கி விட வேண்டும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)நடுவு நிலைமை (Natuvu Nilaimai)