குறள் (Kural) - 112

குறள் (Kural) 112
குறள் #112
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.

பொருள்
நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்.

Tamil Transliteration
Seppam Utaiyavan Aakkanj Chidhaivindri
Echchaththir Kemaappu Utaiththu.

மு.வரதராசனார்

நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.

சாலமன் பாப்பையா

நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்.

கலைஞர்

நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்.

பரிமேலழகர்

செப்பம் உடையவன் ஆக்கம் - நடுவு நிலைமையை உடையவனது செல்வம்; சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து - பிறர் செல்வம் போல அழிவு இன்றி அவன் வழியிலுள்ளார்க்கும் வலியாதலை உடைத்து. (விகாரத்தால் தொக்க எச்ச உம்மையான் இறக்கும் துணையும் அவன்றனக்கும் ஏமாப்பு உடைத்து என்பது பெற்றாம். அறத்தோடு வருதலின், அன்னதாயிற்று. தான் இறந்தவழி எஞ்சி நிற்பதாகலின் 'எச்சம்' என்றார்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

செப்பம் உடையவன் ஆக்கம்-நடுவுநிலைமை யுடையவனது செல்வம்; சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து-பிறர் செல்வம் போல் அழியாது அவன் வழியினர்க்கும் வலிமையாதலை யுடையது. வலிமை-பாதுகாப்பு. எச்சவும்மை தொக்கது. ஒருவனுக்குப் பின் எஞ்சி நிற்பதாகலின் வழிமரபு எச்சமெனப்பட்டது.

மணக்குடவர்

நடுவு நிலைமை யுடையவனது செல்வம் தன்னளவிலுங் கேடின்றியே நின்று, தன் வழியுள்ளார்க்குங் கேடுவாராமற் காவலாதலையுடைத்து. நடுவுநிலைமையுடையார் செல்வம் அழியாதென்றவாறு.

புலியூர்க் கேசிகன்

செம்மை உடையவனின் பொருள் வளமையானது இடையிலே அழிந்து போகாமல், அவன் வழியினர்க்கும் உறுதியாக நன்மை தரும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)நடுவு நிலைமை (Natuvu Nilaimai)