குறள் (Kural) - 114

குறள் (Kural) 114
குறள் #114
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.

பொருள்
ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்.

Tamil Transliteration
Thakkaar Thakavilar Enpadhu Avaravar
Echchaththaar Kaanap Patum.

மு.வரதராசனார்

நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலை‌மை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.

சாலமன் பாப்பையா

இவர் நீதியாளர், இவர் நீதியற்றவர் என்ற வேறுபாட்டை அவரவர் தம் செல்வம், புகழ், பிள்ளைகளின் ஒழுக்கம் ஆகியவற்றால் அறிந்து கொள்ளலாம்.

கலைஞர்

ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்.

பரிமேலழகர்

தக்கார் தகவிலர் என்பது - இவர் நடுவு நிலைமை உடையவர், இவர் நடுவு நிலைமை இலர் என்னும் விசேடம்; அவரவர் எச்சத்தால் காணப்படும் - அவரவருடைய நன்மக்களது உண்மையானும் இன்மையானும் அறியப்படும். (தக்கார்க்கு எச்சம் உண்டாதலும் தகவிலார்க்கு இல்லையாதலும் ஒரு தலையாகலின், இருதிறத்தாரையும் அறிதற்கு அவை குறியாயின. இதனால் தக்காரையும் தகவிலாரையும் அறியுமாறு கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

தக்கார் தகவு இல்லர் என்பது-இவர் நேர்மை யுடையவர் அல்லது இல்லாதவர் என்னும் உண்மை; அவரவர் எச்சத்தால் காணப்படும்-அவரவருடைய மக்களால் அறியப்படும். தக்கார்க்கு நன்மக்களும் தகவிலார்க்குப் புன்மக்களும் பிறத்தல் இயல்பாதலின் , 'அவரவர் எச்சத்தாற் காணப்படும்' என்றார். எச்சம் என்னும் சொல் , மக்களின் வாழ்க்கை மட்டுமன்றிப் பெற்றோரின் முகத்தோற்றமும் குணவமைதியும் எஞ்சி நிற்பதைக் குறிக்கும் . அதனால் , மக்கள் என்னுஞ் சொல்லினும் தகுதியும் பொருட்பொலிவு முடையதாம் . 'யோக்கியர்' என்னும் வடசொல் வழக்கூன்றியதால் , தக்கார் என்னும் தமிழ்சொல் வழக்கற்றதென அறிக .

மணக்குடவர்

செவ்வை யுடையார் செவ்வையிலரென்பது அவரவர் ஆரவாரத்தொழிலினானே காணப்படும். இது தம்மளவிலே நிற்பதல்லது தம் மக்களையும் விடாதென்பது கூறிற்று. (இதனால் எச்சத்தால் என்பதற்கு மக்களானே என்றுரையிருக்கலாமென்பது விளங்குகின்றது.)

புலியூர்க் கேசிகன்

ஒருவர் தகுதியாளர், மற்றவர் தகுதியற்றவர் என்று உரைப்பது எல்லாம், அவரவரது எஞ்சி நிற்கும் புகழும் பழியும் என்பனவற்றால் காணப்படும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)நடுவு நிலைமை (Natuvu Nilaimai)