குறள் (Kural) - 1098
அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.
பொருள்
நான் பார்க்கும் போது என் மீது பரிவு கொண்டவளாக மெல்லச் சிரிப்பாள்; அப்போது, துவளுகின்ற அந்தத் துடியிடையாள் ஒரு புதிய பொலிவுடன் தோன்றுகிறாள்.
Tamil Transliteration
Asaiyiyarku Untaantor Eeryaan Nokkap
Pasaiyinal Paiya Nakum.
மு.வரதராசனார்
யான் நோக்கும் போது அதற்காக அன்பு கொண்டவனாய் மெல்லச் சிரிப்பாள், அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.
சாலமன் பாப்பையா
யாரோ எவரோ போல அவள் பேசிய பின்பும் நான் அவளைப் பார்க்க, அவள் மனம் நெகிழ்ந்து மனத்திற்குள் மெல்ல சிரித்தாள்; அச்சிரிப்பிலும் அவளுக்கு ஏதோ ஒரு குறிப்பு இருப்பது தெரிகிறது.
கலைஞர்
நான் பார்க்கும் போது என் மீது பரிவு கொண்டவளாக மெல்லச் சிரிப்பாள்; அப்போது, துவளுகின்ற அந்தத் துடியிடையாள் ஒரு புதிய பொலிவுடன் தோன்றுகிறாள்.
பரிமேலழகர்
(தன்னை நோக்கி மகிழ்ந்த தலைமகளைக் கண்டு தலைமகன் கூறியது.) யான் நோக்கப் பசையினள் பைய நகும் - என்னை அகற்றுகின்ற சொற்கு ஆற்றாது யான் இரந்து நோக்கியவழி அஃது அறிந்து நெகிழ்ந்து உள்ளே மெல்ல நகாநின்றாள்;அசையியற்கு ஆண்டு ஓர் ஏர் உண்டு - அதனால் நுடங்கியஇயல்பினை உடையாட்கு அந்நகையின்கண்ணே தோன்றுகின்றதோர் நன்மைக் குறிப்பு உண்டு .
புலியூர்க் கேசிகன்
அவளை இரப்பது போல யான் பார்த்த போது, அதனால் நெகிழ்ந்தவளாய் மெல்ல நகைத்தாள்; அதனால் அசையும் இயல்பு உடையவளுக்கு நன்மைக் குறிப்பும் உண்டு
பால் (Paal) | காமத்துப்பால் (Kaamaththuppaal) |
---|---|
இயல் (Iyal) | களவியல் (Kalaviyal) |
அதிகாரம் (Adhigaram) | குறிப்பறிதல் (Kuripparidhal) |