குறள் (Kural) - 1099

குறள் (Kural) 1099
குறள் #1099
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.

பொருள்
காதலர்களுக்கு ஓர் இயல்பு உண்டு; அதாவது, அவர்கள் பொது இடத்தில் ஒருவரையொருவர் அந்நியரைப் பார்ப்பதுபோலப் பார்த்துக்கொள்வர்.

Tamil Transliteration
Edhilaar Polap Podhunokku Nokkudhal
Kaadhalaar Kanne Ula.

மு.வரதராசனார்

புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொது நோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள இயல்பாகும்.

சாலமன் பாப்பையா

முன்பின் தெரியாதவர் போல, பொதுவாக பார்த்தப் பேசுவது காதலர்களிடம் இருக்கும் குணந்தான்.

கலைஞர்

காதலர்களுக்கு ஓர் இயல்பு உண்டு; அதாவது, அவர்கள் பொது இடத்தில் ஒருவரையொருவர் அந்நியரைப் பார்ப்பதுபோலப் பார்த்துக்கொள்வர்.

பரிமேலழகர்

(தோழி மதியுடம்படுவாள் தன்னுள்ளே சொல்லியது) ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் - முன்னறியாதார் போல ஒருவரையொருவர் பொதுநோக்கத்தான் நோக்குதல்; காதலார் கண்ணே உள - இக்காதலையுடையர் கண்ணே உளவாகாநின்றன. (பொது நோக்கு : யாவர் மாட்டும் ஒரு தன்மைத்தாய நோக்குதல் தொழில் ஒன்றேயாயினும், இருவர்கண்ணும் நிகழ்தலானும், ஒருவர்கண்தானும் குறிப்பு வேறுபாட்டால் பலவாம் ஆகலானும், 'உள' எனப் பன்மையாற் கூறப்பட்டது. இருவரும் 'மது மறைந்துண்டார் மகிழ்ச்சிபோல உள்ளத்துள்ளே மகிழ்தலின்' (இறையனார்-8) அதுபற்றிக் 'காதலார்' என்றும், அது புறத்து வெளிப்படாமையின் 'ஏதிலார் போல' என்றும் கூறினாள்.)

புலியூர்க் கேசிகன்

முன் அறியாதவரைப் போலத் தம்முள் பொது நோக்காகவே ஒருவரையொருவர் பார்த்தலும், தம் உள்ளத்திலே காதல் உடையவரிடம் காணப்படும் தன்மை ஆகும்

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)களவியல் (Kalaviyal)
அதிகாரம் (Adhigaram)குறிப்பறிதல் (Kuripparidhal)