குறள் (Kural) - 1097

குறள் (Kural) 1097
குறள் #1097
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.

பொருள்
பகையுணர்வு இல்லாத கடுமொழியும், பகைவரை நோக்குவது போன்ற கடுவிழியும், வெளியில் அயலார் போல நடித்துக்கொண்டு உள்ளத்தால் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிப்புகளாகும்.

Tamil Transliteration
Seraaach Chirusollum Setraarpol Nokkum
Uraaarpondru Utraar Kurippu.

மு.வரதராசனார்

பகை கொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர் போல் பார்க்கும் பார்வையும் புறத்தே அயலார் போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும்.

சாலமன் பாப்பையா

(ஆம். இப்போது தெரிகிறது) கோபம் இல்லாமல் பேசும் பேச்சும், பகைவர் போன்ற பார்வையும், யாரே போலத் தோன்றி நட்பாவார் காட்டும் அடையாளங்கள்.

கலைஞர்

பகையுணர்வு இல்லாத கடுமொழியும், பகைவரை நோக்குவது போன்ற கடுவிழியும், வெளியில் அயலார் போல நடித்துக்கொண்டு உள்ளத்தால் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிப்புகளாகும்.

பரிமேலழகர்

(இதுவும் அது.) செறாஅச் சிறு சொல்லும் - பின் இனிதாய் முன் இன்னாதாய சொல்லும்; செற்றார் போல் நோக்கும் - அகத்துச் செறாதிருந்தே புறத்துச் செற்றார் போன்ற வெகுளி நோக்கும்; உறாஅர் போன்று உற்றார் குறிப்பு - நொதுமலர் போன்று நட்பாயினார்க்கு ஒரு குறிப்புப்பற்றி வருவன. (குறிப்பு: ஆகுபெயர். இவை உள்ளே ஒரு பயன் குறித்துச் செய்கின்றன இயல்பல்ல ஆகலான், இவற்றிற்கு அஞ்ச வேண்டா என்பதாம்.)

புலியூர்க் கேசிகன்

நம்மை உள்ளத்திலே சினவாதவரின் சொல்லும், சினந்தார் போலப் பார்க்கும் பார்வையும், அயலார்போல் உள்ளத்திலுள்ள ஒரு குறிப்பாலே வருவன

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)களவியல் (Kalaviyal)
அதிகாரம் (Adhigaram)குறிப்பறிதல் (Kuripparidhal)