குறள் (Kural) - 1079
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.
பொருள்
ஒருவர் உடுப்பதையும் உண்பதையும் கண்டுகூட பெறாமைப்படுகிற கயவன், அவர்மீது வேண்டுமென்றே குற்றம் கூறுவதில் வல்லவனாக இருப்பான்.
Tamil Transliteration
Utuppadhooum Unpadhooum Kaanin Pirarmel
Vatukkaana Vatraakum Keezh.
மு.வரதராசனார்
கீழ் மகன் பிறர் உடுப்பதையும், உண்பதையும் கண்டால் அவர் மேல் பொறாமை கொண்டு, வேண்டும் என்றே குற்றம் காண வல்லவனாவான்.
சாலமன் பாப்பையா
பிறர் நன்கு உடுத்த, உண்ணக் கண்டால், அவர்மீத குற்றம் காணும் ஆற்றலை உடையவர் கயவர்.
கலைஞர்
ஒருவர் உடுப்பதையும் உண்பதையும் கண்டுகூட பெறாமைப்படுகிற கயவன், அவர்மீது வேண்டுமென்றே குற்றம் கூறுவதில் வல்லவனாக இருப்பான்.
பரிமேலழகர்
உடுப்பதூஉம் உண்பதூஉம் கீழ் காணின் - பிறர் செல்வத்தால் பட்டும் துகிலும் உடுத்தலையும் பாலோடு அடிசில் உண்டலையும் கீழாயினான் காணுமாயின்; பிறர்மேல்வடுக்காண வற்றாகும் - அவற்றைப் பொறாது அவர்மாட்டு வடுவில்லையாகவும் உண்டாக்கவல்லனாம். (உடுப்பது உண்பது என்பன ஈண்டு அவ்வத்தொழில்மேல் நின்றன, அவற்றால், பூண்டல் ஊர்தல் முதலிய பிற தொழில்களும் கொள்ளப்படும். அவற்றைக் கண்ட துணையானே பொறாமை யெய்தலின் 'காணின்' என்றும், கேட்டார் இது கூடும் என்று இயையப் படைத்தல் அரிது ஆகலின் 'வற்றாகும்' என்றும் கூறினார். இதனால், பிறர் செல்வம் பொறாமை கூறப்பட்டது.)
புலியூர்க் கேசிகன்
பிறர் நன்றாக உடுப்பதையும் சுவையோடு உண்பதையும் கீழ்மகன் கண்டால், அவற்றைப் பொறாமல், அவர் மேல் வடு உண்டாக்கவும் முயல்வான்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | குடியியல் (Kudiyiyal) |
அதிகாரம் (Adhigaram) | கயமை (Kayamai) |