குறள் (Kural) - 1078

குறள் (Kural) 1078
குறள் #1078
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.

பொருள்
குறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரி பயனைப் பெற முடியும்; ஆனால் கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவதுபோல், போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும்.

Tamil Transliteration
Sollap Payanpatuvar Saandror Karumpupol
Kollap Payanpatum Keezh.

மு.வரதராசனார்

அணுகி குறைச் சொல்லுகின்ற அளவிலேயே சான்றோர் பயன்படுவர், கரும்புபோல் அழித்துப் பிழிந்தால் தான் கீழ்மக்கள் பயன்படுவர்.

சாலமன் பாப்பையா

இல்லாதவர் சென்று தம் நிலையைச் சொன்ன அளவில், சான்றோர் இரங்கிக் கொடுப்பர்; கயவர்களோ கரும்பைப் பிழிவதுபோல் பிழிந்தால்தான் கொடுப்பர்.

கலைஞர்

குறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரி பயனைப் பெற முடியும்; ஆனால் கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவதுபோல், போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும்.

பரிமேலழகர்

சொல்லப் பயன்படுவர் சான்றோர் -மெலியர் சென்று தம் குறையைச் சொல்லிய துணையானே இரங்கிப் பயன்படுவர் மேலாயினார்; கீழ் கரும்புபோல் கொல்லப் பயன்படும் - மறைக் கீழயினார் கரும்பு போல வலியார் நைய நெருக்கிய வழிப் பயன்படுவர். (பயன்படுதல்: உள்ளது கொடுத்தல். கீழாயினாரது இழிவு தோன்ற, மேலாயினாரையும் உடன் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவர் கொடுக்குமாறு கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

குறையைச் சொன்னதும் இரக்கங்கொண்டு உதவுவதற்கு மேலோர் பயன்படுவார்கள்; கரும்பைப்போல் வலியவர் நெருக்கிப் பிழிந்தால் கயவர் அவருக்குப் பயன்படுவர்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)குடியியல் (Kudiyiyal)
அதிகாரம் (Adhigaram)கயமை (Kayamai)