குறள் (Kural) - 1065
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்.
பொருள்
கூழ்தான் குடிக்கவேண்டிய நிலை என்றாலும், அதையும் தானே உழைத்துச் சம்பாதித்துக் குடித்தால் அதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.
Tamil Transliteration
Thenneer Atupurkai Aayinum Thaaldhandhadhu
Unnalin Oonginiya Thil.
மு.வரதராசனார்
தெளிந்த நீர் போல் சமைத்த கூழே ஆனாலும், முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.
சாலமன் பாப்பையா
நீரே மிகுதியாக இருக்கச் சமைக்கப்பட்ட கஞ்சியே என்றாலும், உழைத்த வரவில் உண்பதைக் காட்டிலும் மேலான மகிழ்ச்சி இல்லை.
கலைஞர்
கூழ்தான் குடிக்கவேண்டிய நிலை என்றாலும், அதையும் தானே உழைத்துச் சம்பாதித்துக் குடித்தால் அதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.
பரிமேலழகர்
தாள் தந்தது தெண்ணீர் அடுபுற்கையாயினும் - நெறியாய முயற்சி கொடுவந்து தந்தது தெளிந்த நீர் போலும் அடுபுற்கையே யாயினும், உண்ணலின் ஊங்கு இனியது இல் - அதனையுண்டற்கு மேல் இனியது இல்லை. (தாள் தந்த கூழ் செறிவின்றித் தெண்ணீர் போன்றதாயினும்; இழிவாய இரவான் வந்ததன்றித் தம் உடைமையாகலின், அமிழ்தத்தோடு ஒக்கும் என்பதாம். இதனான் நெறியினானாயது சிறிதேனும், அது செய்யும் இன்பம் பெரிது என்பது கூறப்பட்டது.)
புலியூர்க் கேசிகன்
நெறியோடு கூடிய முயற்சியாலே கொண்டு வந்தது, தெளிந்த நீரைப் போலத் தோன்றும் புல்லரிசிக் கஞ்சியே யானாலும், அதனை உண்பதை விட இனியது வேறு யாதும் இல்லை
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | குடியியல் (Kudiyiyal) |
அதிகாரம் (Adhigaram) | இரவச்சம் (Iravachcham) |