குறள் (Kural) - 1063

இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.
பொருள்
வறுமைக்கொடுமையைப் பிறரிடம் இரந்து போக்கிக் கொள்ளலாம் என்று கருதும் கொடுமையைப் போல் வேறொரு கொடுமை இல்லை.
Tamil Transliteration
Inmai Itumpai Irandhudheer Vaamennum
Vanmaiyin Vanpaatta Thil.
மு.வரதராசனார்
வறுமைத் துன்பத்தை இரப்பதன் வாயிலாகத் தீர்ப்போம், என்று கருதி முயற்சியைக் கைவிட்ட வன்மையைப் போல் வன்மையானது வேறு இல்லை.
சாலமன் பாப்பையா
இல்லாமையால் வரும் துன்பத்தை (உழைத்துப் போக்காது) பிச்சை எடுத்துப் போக்கிக் கொள்ளலாம் என்று எண்ணும் கொடுமையிலும் கொடுமை வேறு இல்லை.
கலைஞர்
வறுமைக்கொடுமையைப் பிறரிடம் இரந்து போக்கிக் கொள்ளலாம் என்று கருதும் கொடுமையைப் போல் வேறொரு கொடுமை இல்லை.
பரிமேலழகர்
இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும் வன்மையின் - வறுமையான் வருந்துன்பத்தை முயன்று நீக்கக்கடவேம் என்று கருதாது இரந்து நீக்கக் கடவேம் என்று கருதும் வன்மை போல; வன்பாட்டது இல் - வலிமைப்பாடுடையது பிறிது இல்லை. (நெறியாய முயற்சி நிற்க, நெறியல்லாத இரவான் தீர்க்கக் கருதுதலின், வன்மையாயிற்று, வன்பாடு - முருட்டுத் தன்மை அஃதாவது, ஓராது செய்து நிற்றல். இதனான் 'வறுமை தீர்த்தற்கு நெறி இரவன்று' என்பது கூறப்பட்டது.)
புலியூர்க் கேசிகன்
வறுமைத் துன்பத்தை முயற்சிகளால் நீக்கக்கடவோம் என்று நினையாமல், இரந்து நீக்க நினைக்கும் வன்மையைப் போல வன்மையுள்ளது பிறிது யாதும் இல்லை
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | குடியியல் (Kudiyiyal) |
அதிகாரம் (Adhigaram) | இரவச்சம் (Iravachcham) |