குறள் (Kural) - 1058

குறள் (Kural) 1058
குறள் #1058
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.

பொருள்
வறுமையின் காரணமாக யாசிப்பவர்கள், தம்மை நெருங்கக் கூடாது என்கிற மனிதர்களுக்கும், மரத்தால் செய்யப்பட்டு இயக்கப்படும் பதுமைகளுக்கும் வேறுபாடே இல்லை.

Tamil Transliteration
Irappaarai Illaayin Eernganmaa Gnaalam
Marappaavai Sendruvan Thatru.

மு.வரதராசனார்

இரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா

பிச்சை ஏற்பார் என்பவர் இல்லாது போய் விட்டால், குளி்ர்ந்த பெரிய இவ்வுலகத்தில் வாழ்பவரின் வாழ்க்கை, வெறும் மரப்பொம்மைகளின் போக்குவரத்தாகவே ஆகிவிடும்.

கலைஞர்

வறுமையின் காரணமாக யாசிப்பவர்கள், தம்மை நெருங்கக் கூடாது என்கிற மனிதர்களுக்கும், மரத்தால் செய்யப்பட்டு இயக்கப்படும் பதுமைகளுக்கும் வேறுபாடே இல்லை.

பரிமேலழகர்

இரப்பார் இல்லாயின் - வறுமையுற்று இரப்பார் இல்லையாயின்; ஈர்ங்கண்மா ஞாலம் - குளிர்ந்த இடத்தையுடைய பெரிய ஞாலத்துள்ளார் செலவு வரவுகள்; மரப்பாவை சென்று வந்தற்று - உயிரில்லாத மரப்பாவை இயந்திரக் கயிற்றால் சென்று வந்தாற்போலும். (ஐகாரம், அசைநிலை. ஞாலம் என்னும் ஆகுபெயர்ப் பொருட்கு உவமையோடு ஒத்த தொழில் வருவிக்கப்பட்டது. ஞாலத்துள்ளார் என்றது அவரை ஒழிந்தாரை. அவர்க்கு ஈதலைச் செய்து புகழும் புண்ணியமும் எய்தாமையின், உயிருடையரல்லார் என்பதாம், 'ஈவாரும் கொள்வாரும் இல்லாத வானத்து, வாழ்வாரே வன் கணவர்', என்றார் பிறரும்: இத்தொடையின்பம் நோக்காது 'இரப்பவர் இல்லாயின்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)

புலியூர்க் கேசிகன்

வறுமையால் இரப்பவர் இல்லையானால், குளிர்ந்த இடத்தையுடைய பெரிய உலகினரின் போக்கும் வரவும், மரப்பாவை இயந்திரக் கயிற்றால் சென்றுவந்தாற் போன்றதாகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)குடியியல் (Kudiyiyal)
அதிகாரம் (Adhigaram)இரவு (Iravu)