குறள் (Kural) - 1057

குறள் (Kural) 1057
குறள் #1057
இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.

பொருள்
இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும் வள்ளல் தன்மை உடையவர்களைக் காணும்போது, இரப்போர் உள்ளம் மகிழ்ச்சியால் இன்பமுறும்.

Tamil Transliteration
Ikazhndhellaadhu Eevaaraik Kaanin Makizhndhullam
Ullul Uvappadhu Utaiththu.

மு.வரதராசனார்

இகழ்ந்து எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை அடையும் தன்மையுடையதாகும்.

சாலமன் பாப்பையா

அவமதிக்காமல், இழிவாகப் பேசாமல் எடுத்துக் கொடுப்பவரைக் கண்டால், பிச்சை கேட்பவரின் மனம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை கொள்ளும்.

கலைஞர்

இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும் வள்ளல் தன்மை உடையவர்களைக் காணும்போது, இரப்போர் உள்ளம் மகிழ்ச்சியால் இன்பமுறும்.

பரிமேலழகர்

இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின் - தம்மை அவமதித்து இழிவு சொல்லாது பொருள் கொடுப்பாரைக் கண்டால்; உள்ளம் மகிழ்ந்து உள்ளுள் உவப்பது உடைத்து - அவ்விரப்பாரது உள்ளம் மகிழ்ந்து உள்ளுள்ளே உவக்கும் தன்மையுடைத்து. (இகழ்ந்து எள்ளாது எனவே, நன்கு மதித்தலும் இனியவை கூறலும் பெறுதும். நிரப்பு இடும்பை கெடுதலளவேயன்றி, ஐம்புலன்களானும் பேரின்பம் எய்தினாராகக் கருதலான், 'உள்ளுள் உவப்பது உடைத்து' என்றார். இவை ஐந்து பாட்டானும் அவ்விரக்கத்தக்காரது இயல்பு கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

தம்மை அவமதித்து இழிவாய்ப் பேசாமல் பொருள் தருவாரைக் கண்டால், இரப்பவரது நெஞ்சமும் மகிழ்ந்து, உள்ளுக்கு உள்ளாகவே உவப்பது உண்டு

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)குடியியல் (Kudiyiyal)
அதிகாரம் (Adhigaram)இரவு (Iravu)