குறள் (Kural) - 1050

குறள் (Kural) 1050
குறள் #1050
துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.

பொருள்
ஒழுங்குமறையற்றதால் வறுமையுற்றோர், முழுமையாகத் தம்மைத் துறக்காமல் உயிர்வாழ்வது, உப்புக்கும் கஞ்சிக்கும்தான் கேடு.

Tamil Transliteration
Thuppura Villaar Thuvarath Thuravaamai
Uppirkum Kaatikkum Kootru.

மு.வரதராசனார்

நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்க கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும்.

சாலமன் பாப்பையா

உண்ண, உடுத்த ஏதம் இல்லாதவர் இல்லறத்தை முழுமையாகத் துறந்து விடாதிருப்பது, பிறர் வீட்டில் இருக்கும் உப்புக்கும் கஞ்சித் தண்ணீருக்கும் எமனாம்.

கலைஞர்

ஒழுங்குமறையற்றதால் வறுமையுற்றோர், முழுமையாகத் தம்மைத் துறக்காமல் உயிர்வாழ்வது, உப்புக்கும் கஞ்சிக்கும்தான் கேடு.

பரிமேலழகர்

துப்புரவு இல்லார் துவரத் துறவாமை - நுகரப்படும் பொருள்களில்லாதார் தம்மாற் செயற்பாலது முற்றத் துறத்தலேயாகவும் அது செய்யாதொழிதல்; உப்பிற்கும் காடிக்கும் கூற்று - பிறர் இல்லினுளவாய உப்பிற்கும் காடிக்கும் கூற்றாம். (மானம் அழியாமையின் செயற்பாலது அதுவேயாயிற்று. முற்றத் துறத்தல் - சுற்றத்தானே விட்டமையின் ஒருவாற்றால் துறந்தாராயினார், நின்ற தம் உடம்பினையும் துறத்தல். அது செய்யாது கொண்டிருத்தல் இரண்டனையும் மாளப் பண்ணுதலின், அதனை அவற்றிற்குக் கூற்று என்றார். இனி 'முற்றத்துறத்தலாவது துப்புரவில்லாமையின் ஒருவாற்றால் துறந்தாராயினார், பின் அவற்றை மனத்தால் துறவாமை' என்று உரைப்பாரும் உளர். இதனான் அஃது உளதாயவழிச் செய்வது கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

பொருளில்லாத வறுமையாளர் செய்யக்கூடியது முற்றத்துறத்தலே; அதனைச் செய்யாதிருப்பது, பிறர் வீட்டு உப்புக்கும் காடிக்கும் தாம் எமனாவதே யாகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)குடியியல் (Kudiyiyal)
அதிகாரம் (Adhigaram)நல்குரவு (Nalkuravu)