குறள் (Kural) - 1024
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.
பொருள்
தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும்.
Tamil Transliteration
Soozhaamal Thaane Mutiveydhum Thamkutiyaith
Thaazhaadhu Ugnatru Pavarkku.
மு.வரதராசனார்
தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும்.
சாலமன் பாப்பையா
தன் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஆக வேண்டிய செயலை விரைந்து செய்பவருக்கு அச்செயலைச் செய்து முடிக்கும் திறம் அவர் நினைக்காமலே கிடைக்கும்.
கலைஞர்
தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும்.
பரிமேலழகர்
தம் குடியைத் தாழாது உஞற்றுபவர்க்கு - தம் குடிக்காம் வினையை விரைந்து முயல்வார்க்கு; சூழாமல் தானே முடிவெய்தும் - அவ்வினை முடிக்கும் திறம் அவர் சூழவேண்டாமல் தானே முடிவெய்தும். (குடி ஆகுபெயர். தெய்வம் முந்துறுதலான் பயன் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் அதற்குத் தெய்வம் துணையாதல் கூறப்பட்டது.)
புலியூர்க் கேசிகன்
தம் குடியை உயர்த்துவதற்கு இடைவிடாமல் முயல்கிறவர்களுக்கு, அதன் வழிபற்றி அவர் ஆராயும் முன்பே, தெய்வ உதவியால், அது தானாகவே முடிந்துவிடும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | குடியியல் (Kudiyiyal) |
அதிகாரம் (Adhigaram) | குடிசெயல் வகை (Kutiseyalvakai) |