குறள் (Kural) - 1023

குறள் (Kural) 1023
குறள் #1023
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.

பொருள்
தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும்.

Tamil Transliteration
Kutiseyval Ennum Oruvarkuth Theyvam
Matidhatruth Thaanmun Thurum.

மு.வரதராசனார்

என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.

சாலமன் பாப்பையா

என் குடியையும் நாட்டையும் மேனமை அடையச் செய்வேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும்.

கலைஞர்

தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும்.

பரிமேலழகர்

குடி செய்வல் என்னும் ஒருவற்கு - என் குடியினை உயரச் செய்யக் கடவேன் என்று கொண்டு, அதற்கு ஏற்ற கருமங்களின் முயலும் ஒருவனுக்கு; தெய்வம் மடி தற்றுத் தான் முந்துறும் - தெய்வம் ஆடையைத் தற்றுக் கொண்டு தான் முந்துற்று நிற்கும். (முயற்சியை அதன் காரணத்தால் கூறினார். தற்றுதல் - இறுக உடுத்தல். முன் நடப்பார் செயல் நியதிமேல் ஏற்றப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

‘என் குடியைப் புகழால் உயரச் செய்வேன்’ என்று அதற்கேற்ற செயல்களிலே ஈடுபடும் ஒருவனுக்கு, தெய்வமும் மடியை உதறிக் கொண்டு முன் வந்து உதவி நிற்கும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)குடியியல் (Kudiyiyal)
அதிகாரம் (Adhigaram)குடிசெயல் வகை (Kutiseyalvakai)