குறள் (Kural) - 997

குறள் (Kural) 997
குறள் #997
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.

பொருள்
அரம் போன்ற கூர்மையான அறிவுடைய மேதையாக இருந்தாலும், மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் மரத்துக்கு ஒப்பானவரேயாவார்.

Tamil Transliteration
Arampolum Koormaiya Renum Marampolvar
Makkatpanpu Illaa Thavar.

மு.வரதராசனார்

மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர் அரம் போல் கூர்மையான அறிவுடையவரானாலும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர்.

சாலமன் பாப்பையா

மனிதப்பண்பு இல்லாதவர்கள் அரம் போல அறிவுக்கூர்மை படைத்தவர் என்றாலும் ஓர் அறிவு படைத்த மரத்தைப் போன்றோரே.

கலைஞர்

அரம் போன்ற கூர்மையான அறிவுடைய மேதையாக இருந்தாலும், மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் மரத்துக்கு ஒப்பானவரேயாவார்.

பரிமேலழகர்

மக்கட்பண்பு இல்லாதவர் - நன்மக்கட்கே உரிய பண்பில்லாதவர்; அரம் போலும் கூர்மையரேனும் - அரத்தின் கூர்மை போலும் கூர்மையை உடையரேயாயினும்; மரம் போல்வர் - ஓர் அறிவிற்றாய மரத்தினை ஒப்பர். (அரம் - ஆகுபெயர். ஓர் அறிவு - ஊற்றினை யறிதல். உவமை இரண்டனுள் முன்னது, தான் மடிவின்றித் தன்னையுற்ற பொருள்களை மடிவித்தலாகிய தொழில் பற்றி வந்தது, ஏனையது, விசேட அறிவின்மையாகிய பண்பு பற்றி வந்தது. அவ்விசேட அறிவிற்குப் பயனாய மக்கட் பண்பு இன்மையின், அதுதானும் இல்லை என்பதாயிற்று.

புலியூர்க் கேசிகன்

நன்மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர்கள், அரத்தைப் போலக் கூர்மை உடையவர் என்றாலும், ஓரறிவேயுள்ள மரத்தைப் போன்றவர்கள் ஆவர்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)குடியியல் (Kudiyiyal)
அதிகாரம் (Adhigaram)பண்புடைமை (Panputaimai)