குறள் (Kural) - 972

குறள் (Kural) 972
குறள் #972
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

பொருள்
பிறப்பினால் அனைவரும் சமம் செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்.

Tamil Transliteration
Pirappokkum Ellaa Uyirkkum Sirappovvaa
Seydhozhil Vetrumai Yaan.

மு.வரதராசனார்

எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.

சாலமன் பாப்பையா

எல்லா மக்களும் பிறப்பால் சமம‌ே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.

கலைஞர்

பிறப்பினால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்.

பரிமேலழகர்

எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் - எல்லா மக்களுயிர்க்கும் பொதுவாகிய பிறப்பியல்பு ஒக்குமே யெனினும்; சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான் - பெருமை சிறுமை எனப்பட்ட சிறப்பியல்புகள் ஒவ்வா அவை செய்யும் தொழில்களது வேறுபாட்டான். (வேறுபாடு - நல்லனவும், தீயனவும், இரண்டுமாயினவும், இரண்டுமல்லவாயினவுமாய அளவறிந்த பாகுபாடுகள். வினைவயத்தாற் பஞ்சபூத பரிணாமமாகிய யாக்கையைப் பொருந்தி நின்று அதன் பயன் அனுபவித்தல் எல்லா வருணத்தார்க்கும் ஒத்தலின் 'பிறப்பு ஒக்கும்' என்றும், பெருமை சிறுமைகட்குக் கட்டளைக் கல்லாகிய தொழிற்பாகுபாடுகள் வருணந்தோறும் யாக்கைதோறும் வேறுபடுதலின், 'சிறப்பு ஒவ்வா' என்றும் கூறினார்.)

புலியூர்க் கேசிகன்

எல்லா மக்களுயிர்க்கும் பிறப்பியல்பு சமமானதே; தொழில் வேறுபாட்டால் பெருமை சிறுமை என்னும் சிறப்பியல்புகள் தாம் ஒரு போதும் ஒத்திருப்பதில்லை

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)குடியியல் (Kudiyiyal)
அதிகாரம் (Adhigaram)பெருமை (Perumai)