குறள் (Kural) - 970

குறள் (Kural) 970
குறள் #970
இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.

பொருள்
மானம் அழியத்தக்க இழிவு வந்ததே என்று உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும் போற்றி நிற்கும்.

Tamil Transliteration
Ilivarin Vaazhaadha Maanam Utaiyaar
Olidhozhudhu Eththum Ulaku.

மு.வரதராசனார்

தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி நிற்பார்கள்.

சாலமன் பாப்பையா

தனக்கு இகழ்ச்சி வரும்போது உயிர்வாழாத மானம் மிக்க மனிதரின் புகழ் வடிவைப் பெரியோர் தொழுது பாராட்டுவர்.

கலைஞர்

மானம் அழியத்தக்க இழிவு வந்ததே என்று உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும் போற்றி நிற்கும்.

பரிமேலழகர்

இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளி - தமக்கு இழிவு வந்துழிப் பொறுத்து உயிர் வாழாது அதனை நீத்த மானமுடையாரது புகழ் வடிவினை; தொழுது ஏத்தும் உலகு - எஞ்ஞான்றும் தொழுது துதியாநிற்பர் உலகத்தார். ('புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவா வானவூர்தி - எய்துவர,'(புறநா.27) ஆகலின், துறக்கச் செலவு சொல்ல வேண்டாவாயிற்று. இவை நான்கு பாட்டானும் மானப் பொருட்டாய இறப்பினது சிறப்புக் கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

தமக்கு ஓர் இழிவு வந்த போது உயிரை விட்டு விட்ட மானமுள்ளவரது புகழ்வடிவினை, எக்காலத்திலும் உலகத்தார் கைதொழுது போற்றித் துதிப்பார்கள்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)குடியியல் (Kudiyiyal)
அதிகாரம் (Adhigaram)மானம் (Maanam)