குறள் (Kural) - 967
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.
பொருள்
தன்னை மதிக்காதவரின் பின்னால் சென்று உயிர் வாழ்வதைவிடச் செத்தொழிவது எவ்வளவோ மேல்.
Tamil Transliteration
Ottaarpin Sendroruvan Vaazhdhala?n Annilaiye
Kettaan Enappatudhal Nandru.
மு.வரதராசனார்
மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர்வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது.
சாலமன் பாப்பையா
இகழுபவர் பின்னே சென்று அவர் தரும் பொருளை, பதவியைப் பெற்று உயிர்வாழ்வதைக் காட்டிலும் அவன் இறந்துபோனான் என்று சொல்லப்படுவது அவனுக்கு நல்லதாம்.
கலைஞர்
தன்னை மதிக்காதவரின் பின்னால் சென்று உயிர் வாழ்வதைவிடச் செத்தொழிவது எவ்வளவோ மேல்.
பரிமேலழகர்
ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் - தன்னை இகழ்வார் பின்னே சென்று பொருள் பெற்று அதனால் ஒருவன் உயிர் வாழ்தலின்; அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று - அது செய்யாது இறந்தான் என்று சொல்லப்படுதல் அவனுக்கு நன்று. (ஒட்டுதல் - பொருந்துதல். 'அந்நிலையே' என்றது, செல்லாத முன்னை நிலைக்கண்ணே நின்று என்றவாறு, அப்பொழுதே என்றும் ஆம். 'புகழும் புத்தேள் நாடும் பயவாதேனும் பொருள் பெற்று உயிர் வாழ்வாம்' என்பாரை நோக்கிக் கூறியது.)
புலியூர்க் கேசிகன்
தன்னை இகழ்பவரின் பின்னே சென்று பொருள் பெற்று, அதனால் உயிர்வாழ்தலைவிட, இறந்தவன் என்று சொல்லப் படுதலே ஒருவனுக்கு நன்மை ஆகும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | குடியியல் (Kudiyiyal) |
அதிகாரம் (Adhigaram) | மானம் (Maanam) |