குறள் (Kural) - 961

குறள் (Kural) 961
குறள் #961
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.

பொருள்
கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய செயல்கள் என்றாலும்கூட அவற்றால் தனது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைத் தவிர்த்திடல் வேண்டும்.

Tamil Transliteration
Indri Amaiyaach Chirappina Aayinum
Kundra Varupa Vital.

மு.வரதராசனார்

இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விட வேண்டும்.

சாலமன் பாப்பையா

ஒன்று இல்லாமல் எதுவும் நடைபெறாது என்னும் அளவிற்கு அது முக்கியமானது; ஆனாலும் அதைச் செய்தால் குடும்பத்திற்கு இழிவு வரும் என்றால் அந்த ஒன்றைச் செய்யாதே.

கலைஞர்

கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய செயல்கள் என்றாலும்கூட அவற்றால் தனது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைத் தவிர்த்திடல் வேண்டும்.

பரிமேலழகர்

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் - செய்யாத வழித்தாம் அமையாத சிறப்பினை உடையவேயெனினும்; குன்ற வருப விடல் - தம் குடிப்பிறப்புத் தாழ வரும் செயல்களை ஒழிக. (அமையாமை - இறத்தல். 'குடிப்பிறப்பு' என்பது அதிகார முறைமையான் வந்தது. 'இறப்பவரும் வழி இளிவந்தன செய்தாயினும் உய்க' என்னும் வடநுல் முறையை மறுத்து, உடம்பினது நிலையின்மையையும், மானத்தினது நிலையுடைமையையும் தூக்கி, அவை செய்யற்க என்பதாம்.)

புலியூர்க் கேசிகன்

மிகவும் இன்றியமையாத சிறப்புக்களை உடையவாயினும், உயர்குடியில் பிறந்தவர், தாழ்ச்சி வரும்படியான செயல்களைச் செய்யாமல் விட வேண்டும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)குடியியல் (Kudiyiyal)
அதிகாரம் (Adhigaram)மானம் (Maanam)