குறள் (Kural) - 952

குறள் (Kural) 952
குறள் #952
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.

பொருள்
ஒழுக்கம், வாய்மை, மானம் ஆகிய இந்த மூன்றிலும் நிலைதவறி நடக்காதவர்களே உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள்.

Tamil Transliteration
Ozhukkamum Vaaimaiyum Naanum Im Moondrum
Izhukkaar Kutippiran Thaar.

மு.வரதராசனார்

உயர் குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்உயர் குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்.

சாலமன் பாப்பையா

நல்ல குடும்பத்தில் பிறந்தவர் ஒழுக்கம், உண்மை, நாணம் என்னும் இம்மூன்றிலிருந்தும் விலகமாட்டார்.

கலைஞர்

ஒழுக்கம், வாய்மை, மானம் ஆகிய இந்த மூன்றிலும் நிலைதவறி நடக்காதவர்களே உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள்.

பரிமேலழகர்

குடிப்பிறந்தார் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார்; ஒழுக்கமும் வாய்மையும நாணும் இம்மூன்றும் இழுக்கார் - தமக்குரிய ஒழுக்கம் மெய்ம்மை நாண் எனப்பட்ட இம்மூன்றன் கண்ணும், கல்வியான் அன்றித் தாமாகவே வழுவார். (ஒழுக்கம் முதலியன மெய்ம்மொழி மனங்களினவாகலின், அம் முறையவாயின. இழுக்குதல் அறியாது வருகின்றமையின் 'இழுக்கார்' என்றார்.)

புலியூர்க் கேசிகன்

நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம் குடிக்கு உரிய நல்ல ஒழுக்கங்கள், வாய்மை காத்தல், பழிக்கு அஞ்சி நாணுதல் என்னும் மூன்றிலும், ஒரு போதுமே தவறமாட்டார்கள்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)குடியியல் (Kudiyiyal)
அதிகாரம் (Adhigaram)குடிமை (Kutimai)