குறள் (Kural) - 939

குறள் (Kural) 939
குறள் #939
உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்.

பொருள்
சூதாட்டத்திற்கு அடிமையாகி விட்டவர்களை விட்டுப் புகழும், கல்வியும், செல்வமும், உணவும், உடையும் அகன்று ஒதுங்கி விடும்.

Tamil Transliteration
Utaiselvam Oonoli Kalviendru Aindhum
Ataiyaavaam Aayang Kolin.

மு.வரதராசனார்

சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும்.

சாலமன் பாப்பையா

சூதாட்டத்தை விரும்பினால் மரியாதை, கல்வி, செல்வம், உணவு, உடை என்ற ஐந்தும் சேரமாட்டா.

கலைஞர்

சூதாட்டத்திற்கு அடிமையாகி விட்டவர்களை விட்டுப் புகழும், கல்வியும், செல்வமும், உணவும், உடையும் அகன்று ஒதுங்கி விடும்.

பரிமேலழகர்

ஆயம் கொளின் - அரசன் சூதினைத் தனக்கு வினோதத் தொழிலாக விரும்புமாயின்; ஒளி கல்வி செல்வம் ஊண் உடை என்று அடையாவாம் - அவனை ஒளியும் கல்வியும் செல்வமும் ஊணும் உடையும் என்று இவ்வைந்தும் சாராவாம். (ஆயம்: ஆகுபெயர். இச்சிறப்புமுறை செய்யுள் நோக்கிப் பிறழ நின்றது. செல்வம் - அறுவகை உறுப்புக்கள். ஊண் உடை என்பனவற்றால் துப்புரவுகளெல்லாம் கொள்ளப்படும். காலமும் கருத்தும் பெறாமையின், இவை உளவாகா என்பதாம். இவை நான்கு பாட்டானும் சிறுமை பல செய்து அவற்றான் இருமையும் கெடுதல் கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

சூதாடலை வேடிக்கை என்று கருதிச் செய்வானானாலும், ஒளியும் கல்வியும் செல்வமும் ஊணும் உடையும் என்னும் இவை ஐந்துமே, அவனை அடையாமற் போய்விடும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)சூது (Soodhu)