குறள் (Kural) - 936

குறள் (Kural) 936
குறள் #936
அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.

பொருள்
சூது எனப்படும் தீமையின் வலையில் விழுந்தவர்கள் வயிறார உண்ணவும் விரும்பாமல் துன்பத்திலும் உழன்று வருந்துவார்கள்.

Tamil Transliteration
Akataaraar Allal Uzhapparsoo Thennum
Mukatiyaan Mootappat Taar.

மு.வரதராசனார்

சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப்பட்டவர், வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவர்.

சாலமன் பாப்பையா

சூதாட்டம் என்னும் மூதேவியால் மூடப்பட்டவர் வயிறும் நிறையாமல், துன்பத்தையும் அனுபவிப்பர்.

கலைஞர்

சூது எனப்படும் தீமையின் வலையில் விழுந்தவர்கள் வயிறார உண்ணவும் விரும்பாமல் துன்பத்திலும் உழன்று வருந்துவார்கள்.

பரிமேலழகர்

சூது என்னும் முகடியான் மூடப்பட்டார் - தன் பெயர் சொல்லல் மங்கலம் அன்மையின் சூது என்று சொல்லப்படும் முகடியான் விழுங்கப்பட்டார்; அகடு ஆரார் அல்லல் உழப்பர் - இம்மைக்கண் வயிறாரப் பெறார்; மறுமைக்கண் நிரயத் துன்பம் உழப்பர். (செல்வங்கெடுத்து நல்குரவு கொடுத்தல் தொழில் வேறுபடாமையின் 'சூது என்னும் முகடி' என்றும், வெற்றி தோல்விகளை நோக்கி ஒரு பொழுதும் விடாராகலின், ஈண்டு 'அகடு ஆரார்' என்றும், பொய்யும் களவும் முதலிய பாவங்கள் ஈட்டலின் ஆண்டு 'அல்லல் உழப்பர்' என்றும் கூறினார். வயிறாராமை சொல்லவே ஏனைப் புலன்கள் நுகரப் பெறாமை சொல்ல வேண்டாவாயிற்று. உழப்பர் என்பது எதிர்கால வினைச்சொல்.)

புலியூர்க் கேசிகன்

சூதென்னும் முகடியினாலே விழுங்கப்பட்டவர்கள், இம்மையிலே வயிறார உணவைப் பெறுவதுடன், மறுமையில் நரகத் துன்பத்திலும் சிக்கி வருந்துவார்கள்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)சூது (Soodhu)