குறள் (Kural) - 933

குறள் (Kural) 933
குறள் #933
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.

பொருள்
பணையம் வைத்து இடைவிடாமல் சூதாடுவதை ஒருவன் பழக்கமாகவே கொள்வானேயானால் அவன் செல்வமும் அந்தச் செல்வத்தை ஈட்டும் வழிமுறையும் அவனைவிட்டு நீங்கிவிடும்.

Tamil Transliteration
Urulaayam Ovaadhu Koorin Porulaayam
Pooip Purame Patum.

மு.வரதராசனார்

ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் ஒரு பொருளை இடைவிடாமல் கூறி சூதாடினால், பொருள் வருவாய் அவனை விட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சேரும்.

சாலமன் பாப்பையா

சூதாட்டத்தில் பெற்ற லாபத்தை ஓயாமல் சொல்லிச் சூதாடினால் உள்ள பொருளும், அதனால் வரும் லாபமும் அடுத்தவர் வசம் அகப்பட்டுவிடும்.

கலைஞர்

பணயம் வைத்து இடைவிடாமல் சூதாடுவதை ஒருவன் பழக்கமாகவே கொள்வானேயானால் அவன் செல்வமும் அந்தச் செல்வத்தை ஈ.ட்டும் வழிமுறையும் அவனைவிட்டு நீங்கிவிடும்.

பரிமேலழகர்

உருள் ஆயம் ஓவாது கூறின் - உருளும் கவற்றின்கண் பட்ட ஆயத்தை இடைவிடாது கூறிச் சூதாடுமாயின்; பொருள் ஆயம் போஒய்ப் புறமே படும் - அரசன் ஈட்டிய பொருளும் அவன் பொருள் வருவாயும் அவனை விட்டுப்போய்ப் பகைவர் கண்ணே தங்கும். (கவற்றினது உருட்சியை அதனினாய ஆயத்தின்மேல் ஏற்றியும், சூதாடலை அது கூறலாகிய காரணத்தின்மேலிட்டும் கூறினார். பொருளாயம் என்பது உம்மைத்தொகை. ஆயம் - வடமொழித் திரிசொல், காத்தற்கண்ணும் இயற்றற் கண்ணும் கருத்திலனாகலின் அவை இரண்டும் பகைவர்பாற் செல்லும் என்பதாம்.)

புலியூர்க் கேசிகன்

உருளும் சுவற்றின் மீது கட்டப்படும் பந்தயப் பொருளை இடைவிடாது சொல்லிச் சூதாடுமாயின், ஈட்டிய பொருளும், வருவாயும் எல்லாம் எதிரிகளிடம் போய்ச் சேர்ந்துவிடும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)சூது (Soodhu)