குறள் (Kural) - 919

குறள் (Kural) 919
குறள் #919
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.

பொருள்
விலைமகளை விரும்பி அவள் பின்னால் போவதற்கும் ``நரகம்'' எனச் சொல்லப்படும் சகதியில் விழுவதற்கும் வேறுபாடே இல்லை.

Tamil Transliteration
Varaivilaa Maanizhaiyaar Mendhol Puraiyilaap
Pooriyarkal Aazhum Alaru.

மு.வரதராசனார்

ஒழுக்க வரையரை இல்லாத பொது மகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்.

சாலமன் பாப்பையா

வேறுபாடு கருதாது பொருள் தருவார் எவரையும் தழுவும் பாலியல் தொழிலாளரின் மெல்லிய தோள்கள், அறிவற்ற கீழ்மக்கள் புகுந்து மூழ்கும் நரகம் ஆகும்.

கலைஞர்

விலைமகளை விரும்பி அவள் பின்னால் போவதற்கும் நரகம் எனச் சொல்லப்படும் சகதியில் விழுவதற்கும் வேறுபாடே இல்லை.

பரிமேலழகர்

வரைவு இலா மாண் இழையார் மென்தோள் - உயர்ந்தோர் இழிந்தோர் என்னாது, விலை கொடுப்பார் யாவரையும் முயங்கும் மகளிரது மெல்லிய தோள்கள்; புரை இலாப் பூரியர்கள் ஆழும் அளறு - அக்குற்றத்தையறியும் அறிவில்லாத கீழ்மக்கள் புக்கு அழுந்தும் நிரயம். (உயர்தற்கு ஏதுவாகலின், 'புரை' எனப்பட்டது. சாதியான் இழிந்தாரின் நீக்குவதற்குப் 'புரை இலாப் பூரியர்கள்' என்றும், அவர் ஆழ்தற்கு ஏதுவாகிய உருவம் முதலிய மூன்றும் என்பது தோன்ற 'மாணிழையார் மென்தோள்' என்றும், அவர்க்கு அளற்றினை இடையின்றிப் பயக்கும் என்பது தோன்ற உருவகமாக்கியும் கூறினார்.)

புலியூர்க் கேசிகன்

உயர்ந்தோர் இழிந்தோர் என்னும் எவரையும், விலை தந்தால் தழுவுகிற மகளிரது மெல்லிய தோள்கள், அறிவில்லாத கீழ்மக்கள் புகுந்து அழுந்தும் நரகம் ஆகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)வரைவின் மகளிர் (Varaivinmakalir)