குறள் (Kural) - 917

குறள் (Kural) 917
குறள் #917
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்.

பொருள்
உள்ளத்தில் அன்பு இல்லாமல் தன்னலத்துக்காக உடலுறவு கொள்ளும் பொதுமகளிர் தோளை, உறுதியற்ற மனம் படைத்தோர் மட்டும் நம்பிக் கிடப்பர்.

Tamil Transliteration
Nirainenjam Illavar Thoivaar Piranenjir
Penip Punarpavar Thol.

மு.வரதராசனார்

நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறுபொருளை விரும்பிக்கூடும் போது மகளிரின் தோளைப் பொருந்துவர்.

சாலமன் பாப்பையா

பிறவற்றைப் பெறும் பொருட்டு மன ஆசை கொண்டு, அதற்காகவே உடம்பால் புணரும் பாலியல் தொழிலாளரின் தோளை மன அடக்கம் இல்லாதவரே தீண்டுவர்.

கலைஞர்

உள்ளத்தில் அன்பு இல்லாமல் தன்னலத்துக்காக உடலுறவு கொள்ளும் பொதுமகளிர் தோளை, உறுதியற்ற மனம் படைத்தோர் மட்டும் நம்பிக் கிடப்பர்.

பரிமேலழகர்

நெஞ்சின் பிற பேணிப் புணர்பவர் தோள் - நெஞ்சினாற் பிறவற்றை ஆசைப்பட்டு அவைகாரணமாகக் கொடுப்பாரை மெய்யாற் புணரும் மகளிர் தோள்களை; நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் - நிறையால் திருந்திய நெஞ்சம் இல்லாதார் தோய்வர். (பொருளும் அதனால் படைக்கப்படுவனவும் விரும்பும் நெஞ்சு அவற்றின் மேலதாகலின், புணர்வது உடம்பு மாத்திரம் என்பது அறிந்து, அது வழி ஓடாது நிற்கும் நெஞ்சினையுடையார். தோயாமையின், அஃதிலார் 'தோய்வர்' என்றார்.)

புலியூர்க் கேசிகன்

நெஞ்சிலே பொருள் மேல் ஆசைகொண்டு, அதைப் பெறக் கருதிப் பொருள் தருபவரோடு உடலால் கூடியிருக்கும் மகளிரது தோள்களை, நெஞ்சமில்லாதவர்களே சேர்வர்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)வரைவின் மகளிர் (Varaivinmakalir)