குறள் (Kural) - 914

குறள் (Kural) 914
குறள் #914
பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்.

பொருள்
அருளை விரும்பி ஆராய்ந்திடும் அறிவுடையவர்கள் பொருளை மட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை இழிவானதாகக் கருதுவார்கள்.

Tamil Transliteration
Porutporulaar Punnalan Thoyaar Arutporul
Aayum Arivi Navar.

மு.வரதராசனார்

பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்த மாட்டார்.

சாலமன் பாப்பையா

அருளோடுகூடப் பொருள்தேடும் அறிவினை உடையவர், வெறும் பொருளையே தேடும் பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.

கலைஞர்

அருளை விரும்பி ஆராய்ந்திடும் அறிவுடையவர்கள் பொருளை மட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை இழிவானதாகக் கருதுவார்கள்.

பரிமேலழகர்

பொருட் பொருளார் புன்னலம் - இன்பமாகிய பொருளை இகழ்ந்து பொருளாகிய பொருளையே விரும்பும் மகளிரது புல்லிய நலத்தை; அருட் பொருள் ஆயும் அறிவினவர் தோயார் - அருளொடு கூடிய பொருளை ஆராய்ந்து செய்யும் அறிவினையுடையார் தீண்டார். (அறம் முதலிய நான்கும் பொருள் எனப்படுதலின், 'பொருட் பொருள்' என விசேடித்தார். புன்மை - இழிந்தார்க்கே உரித்தாதல். தாம் விரும்புகின்ற அறத்திற்கு அவர் மெய்ந்நலம் மறுதலையாகலின், 'தோயார்' என்பதாம்.)

புலியூர்க் கேசிகன்

இன்பமாகிய பொருளை இகழ்ந்து, பொருளையே விரும்பும் பொதுமகளிரது இழிந்த இன்பத்தை, அருளோடு கூடிய பொருளை ஆராய்ந்து செய்யும் அறிவாளர் விரும்பார்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)வரைவின் மகளிர் (Varaivinmakalir)