குறள் (Kural) - 911

குறள் (Kural) 911
குறள் #911
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்.

பொருள்
அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுகிறவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும்.

Tamil Transliteration
Anpin Vizhaiyaar Porulvizhaiyum Aaidhotiyaar
Insol Izhukkuth Tharum.

மு.வரதராசனார்

அன் பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொது மகளிர் பேசுகின்ற இனிய சொல், ஒருவனுக்கு துன்பத்தைக் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா

அன்பால் நம்மை விரும்பாது, பொருள் பெறவே விரும்பும் பாலியல் தொழிலாளரின் இனிய சொற்கள் துன்பமே தரும்.

கலைஞர்

அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுகிறவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும்.

பரிமேலழகர்

அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய் தொடியார் - ஒருவனை அன்புபற்றி விழையாது பொருள்பற்றி விழையும் மகளிர்; இன்சொல் இழுக்குத் தரும் - அது கையுறும் துணையும் தாம் அன்பு பற்றி விழைந்தாராகச் சொல்லும் இனிய சொல் அவனுக்குப் பின் இன்னாமையைப் பயக்கும். (பொருள் என்புழி 'இன்' விகாரத்தால் தொக்கது. ஆய்ந்த தொடியினையுடையார் என்றதனாலும், இனிய சொல் என்றதனாலும், அவர் கருவி கூறப்பட்டது. அச்சொல் அப்பொழுதைக்கு இனிதுபோன்று பின் வறுமை பயத்தலின் அது கொள்ளற்க என்பதாம்.)

புலியூர்க் கேசிகன்

அன்பால் விரும்பாமல், அவன் தரும் பொருளையே விரும்பும் மகளிரது, அவனையே அன்பால் விரும்பியது போலப் பேசும் பேச்சும், அவனுக்குப் பின்னர்த் துன்பம் தரும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)வரைவின் மகளிர் (Varaivinmakalir)