குறள் (Kural) - 899

குறள் (Kural) 899
குறள் #899
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.

பொருள்
உயர்ந்த கொள்கை உறுதி கொடண்வர்கள் சீறி எழுந்தால், அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும்.

Tamil Transliteration
Endhiya Kolkaiyaar Seerin Itaimurindhu
Vendhanum Vendhu Ketum.

மு.வரதராசனார்

உயர்ந்த கொள்கையுடைய பெரியவர் சீறினால் நாட்டை ஆளும் அரசனும் இடை நடுவே முறிந்து அரசு இழந்து கெடுவான்.

சாலமன் பாப்பையா

உயர்ந்த கொள்கையை உடைய பெரியோர் சினம் கொள்வார் என்றால், ஆட்சியாளனும்கூடத் தன் பதவியை இடையிலேயே இழந்து கெடுவான்.

கலைஞர்

உயர்ந்த கொள்கை உறுதி கொண்டவர்கள் சீறி எழுந்தால், அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும்.

பரிமேலழகர்

ஏந்திய கொள்கையார் சீறின் - காத்தற்கு அருமையான உயர்ந்த விரதங்களை உடையார் வெகுள்வராயின்; வேந்தனும் இடை வேந்து முரிந்து கெடும் - அவராற்றலான் இந்திரனும் இடையே தன் பதம் இழந்து கெடும். '(''வேந்தன் மேய தீம்புனல் உலகமும்'' (தொல். பொருள். அகத்.5) என்றார் பிறரும். நகுடன் என்பான் இந்திரன் பதவி பெற்றுச் செல்கின்ற காலத்துப் பெற்ற களிப்பு மிகுதியால் அகத்தியன் வெகுள்வதோர் பிழை செய, அதனால் சாபமெய்தி அப்பதம் இடையே இழந்தான் என்பதனை உட்கொண்டு இவ்வாறு கூறினார். இவை நான்கு பாட்டானும் முனிவரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

உயர்ந்த விரத வாழ்வைக் கொண்டவர்கள் சீற்றம் அடைந்தால், இந்திரன் போன்ற வாழ்க்கையுடையவனும், அப்போதே அழிந்து போய்விடுவான்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pizhaiyaamai)