குறள் (Kural) - 873

குறள் (Kural) 873
குறள் #873
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.

பொருள்
தனியாக நின்று பலரின் பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம் பிடித்தவன் என்பதைவிட அறிவிலி என்பதே பொருத்தமாகும்.

Tamil Transliteration
Emur Ravarinum Ezhai Thamiyanaaip
Pallaar Pakaikol Pavan.

மு.வரதராசனார்

தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தாரை விட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.

சாலமன் பாப்பையா

தன்னந் தனியனாக இருந்து கொண்டு, பலரையும் பகைவர்களாகப் பெறும் ஆட்சியாளன் பித்தரிலும் அறிவற்றவன்.

கலைஞர்

தனியாக நின்று பலரின் பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம் பிடித்தவன் என்பதைவிட அறிவிலி என்பதே பொருத்தமாகும்.

பரிமேலழகர்

தமியனாய்ப் பல்லார் பகை கொள்பவன் - தான் தனியனாய் வைத்துப் பலரோடு பகை கொள்வான்; ஏமுற்றவரினும் ஏழை - பித்துற்றாரினும் அறிவிலன். (தனிமை - சுற்றம்,நட்பு, படை முதலிய இன்மை. மயக்கத்தால் ஒப்பாராயினும் ஏமுற்றவர் அதனால் தீங்கு எய்தாமையின் தீங்கெய்துதலுமுடைய இவனை 'அவரினும் ஏழை' என்றார்.தீங்காவது துணையுள் வழியும் வேறல் ஐயமாயிருக்க ,அஃது இன்றியும் பலரோடு பகைகொண்டு அவரால் வேறுவேறு பொருதற்கண்ணும் அழிந்தே விடுதல். இவை மூன்று பாட்டானும் பகைகோடற் குற்றம் பொதுவினுஞ் சிறப்பினும் கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

தான் துணைவலிமை இல்லாமல் தனியனாய் இருப்பதறிந்தும், பலருடன் பகைகொண்டு வாழும் அறிவற்றவன், பித்துற்ற மக்களிலும் அறிவிழந்தவன் ஆவான்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)பகைத்திறம் தெரிதல் (Pakaiththirandheridhal)