குறள் (Kural) - 87

குறள் (Kural) 87
குறள் #87
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.

பொருள்
விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்.

Tamil Transliteration
Inaiththunaith Thenpadhon Rillai Virundhin
Thunaiththunai Velvip Payan.

மு.வரதராசனார்

விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.

சாலமன் பாப்பையா

விருந்தினரைப்
பேணுவதும் ஒரு யாகமே. அதைச் செய்வதால் வரும் நன்மை இவ்வளவு என்று அளவிட
முடியாது; வரும் விருந்தினரின் தகுதி அளவுதான் நன்மையின் அளவாகும்.

கலைஞர்

விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்.

பரிமேலழகர்

வேள்விப்பயன் இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை - விருந்தோம்பல் ஆகிய வேள்விப் பயன் இன்ன அளவிற்று என்பதோர் அளவுடைத்தன்று; விருந்தின் துணைத்துணை - அதற்கு அவ்விருந்தின் தகுதியளவே அளவு. (ஐம்பெரு வேள்வியின் ஒன்றாகலின் 'வேள்வி' என்றும், பொருள் அளவு தான் சிறிது ஆயினும் தக்கார்கைப் பட்டக்கால் , வான் சிறிதாப் போர்த்து விடும் (நாலடி.38) ஆகலின், இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை என்றும் கூறினார். இதனான் இருமையும் பயத்தற்குக் காரணம் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

வேள்விப்பயன் இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை-விருந்தினர்க்குணவு படைத்தலின் பயன் இவ்வளவினது என்று வரையறுத்துச் சொல்லுந் திறத்த தன்று; விருந்தின் துணைத் துணை-விருந்தினரின் தகுதியளவே அதன் அளவாம். வேட்டுச் செய்யும் வினையாகலின் விருந்தோம்பலை வேள்வி என்றார். வேட்டல் விரும்பல். "உறக்குந் துணையதோ ராலம்வித் தீண்டி யிறப்ப நிழற்பயந் தா அங்-கறப்பயனும் தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்து விடும்". என்பது நாலடியார்(38).

மணக்குடவர்

விருந்தினர்க்கு அளித்ததனால் வரும் பயன் இன்ன அளவினையுடைத்தென்று சொல்லலாவது ஒன்றில்லை. அவ்விருந்தினரின் தன்மை யாதோ ரளவிற்று அத்தன்மை யளவிற்று விருந்தோம்பலின் பயன்.

புலியூர்க் கேசிகன்

விருந்தோம்பலாகிய வேள்வியின் பயன் இன்ன அளவினது என்று கூறத்தக்கது அன்று; அது விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினது ஆகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)விருந்தோம்பல் (Virundhompal)