குறள் (Kural) - 86

குறள் (Kural) 86
குறள் #86
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு.

பொருள்
வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்.

Tamil Transliteration
Selvirundhu Ompi Varuvirundhu Paarththiruppaan
Nalvarundhu Vaanath Thavarkku.

மு.வரதராசனார்

வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.

சாலமன் பாப்பையா

வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தை எதிர்பார்த்து இருப்பவன் மறுமையில் வானத்தவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான்.

கலைஞர்

வந்த
விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய
விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல
விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்.

பரிமேலழகர்

செல் லிருந்து ஓம்பி வருவிருந்து பார்த்து இருப்பான் - தன் கண்சென்ற விருந்தைப் பேணிப் பின் செல்லக் கடவ விருந்தைப் பார்த்துத் தான், அதனோடு உண்ண இருப்பான்; வானத்தவர்க்கு நல் விருந்து - மறுபிறப்பில் தேவனாய் வானிலுள்ளார்க்கு நல் விருந்து ஆம். ('வருவிருந்து' என்பது இடவழு அமைதி. நல்விருந்து: எய்தா விருந்து. இதனான் மறுமைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்-தன்னிடம் முந்திவந்த விருந்தினரைப் பேணிவிட்டுப் பின்பு பிந்தி வரும் விருந்தினரையும் எதிர்பார்த்து அவரோடு தானுண்ணக் காத்திருப்பான்; வானத்தவர்க்கு நல்விருந்து-மறுமையில் தேவனாகி விண்ணகத்தாரால் சிறந்த விருந்தினனாக ஏற்றுக்கொள்ளப் படுவான். பண்டை வேளாண் மகளிர் தம் பிள்ளைகளை முறையாக விடுத்து வழிப்போக்கரைத் தடுத்துத் தம் வீட்டிற்கு வருவித்து விருந்தோம்பிய செய்தியை, "உரன்கெழு நோன்பகட் டுழவர் தங்கை பிடிக்கை யன்ன பின்னுவீழ் சிறுபுறத்துத் தொடிக்கை மகடூஉ மகமுறை தடுப்ப இருங்கா ழுலக்கை யிரும்புமுகந் தேய்த்த அவைப்புமா ணரிசி யமலைவெண் சோறு கவைத்தா ளலவன் கலவையொடு பெறுகுவிர்" என்னும் சிறுபாணாற்றுப் படைப் பகுதியால் ( 160-165)அறிக

மணக்குடவர்

வந்த விருந்தினரைப் போற்றி வாராத விருந்தினரது வரவு பார்த்திருக்குமவன், வானத்தவர்க்கு நல்விருந்தாவன். வரவு பார்த்தல்-விருந்தின்றி யுண்ணாமை.

புலியூர்க் கேசிகன்

செல்லும் விருந்தினரையும் போற்றி, வரும் விருந்தையும் எதிர்பார்த்திருப்பவன், வானத்துத் தேவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)விருந்தோம்பல் (Virundhompal)