குறள் (Kural) - 869

குறள் (Kural) 869
குறள் #869
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.

பொருள்
அஞ்சிடும் கோழைகளாகவும், அறிவில்லாக் கோழைகளாகவும் பகைவர்கள் இருப்பின் அவர்களை எதிர்ப்போரை விடுத்து வெற்றியெனும் இன்பம் விலகாமலே நிலைத்து நிற்கும்.

Tamil Transliteration
Seruvaarkkuch Chenikavaa Inpam Arivilaa
Anjum Pakaivarp Perin.

மு.வரதராசனார்

அறிவு இல்லாத அஞ்சும் இயல்புடைய பகைவரைப் பெற்றால், அவரை எதிர்த்து பகை கொள்பவர்க்கு இன்பங்கள் தொலைவில் நீங்காமல் இருக்கும்.

சாலமன் பாப்பையா

நீதியை அறியும் அறிவற்ற, எதற்கும் அஞ்சுகிற பகைவரைப் பெற்றால், அத்தகைய பகைவரைப் பெற்றவர்களை விட்டுச் சிறந்த நன்மைகள் விலக மாட்டா.

கலைஞர்

அஞ்சிடும் கோழைகளாகவும், அறிவில்லாக் கோழைகளாகவும் பகைவர்கள் இருப்பின் அவர்களை எதிர்ப்போரை விடுத்து வெற்றியெனும் இன்பம் விலகாமலே நிலைத்து நிற்கும்.

பரிமேலழகர்

அறிவு இலா அஞ்சும் பகைவர்ப் பெறின் - நீதியை அறிதல் இல்லாத, அஞ்சும் பகைவரைப் பெற்றால்; செறுவார்க்குச் சேண் இன்பம் இகவா - அவரைச் செறுவார்க்கு உயர்ந்த இனபங்கள் நீங்கா. (உபாயம் அறிதலும் அறிந்தால் செய்து முடிக்கும் திண்மையும் இல்லாதாரே பகைவராதல் கூடாமையின் 'பெறின்' என்றும், அவரை அறிந்து மேற்சென்ற பொழுதே பகையின்மையும் செல்வமும் ஒருங்கே எய்தலின், 'சேணுடை இன்பங்கள் இகவா' என்றும் கூறினார்.)

புலியூர்க் கேசிகன்

நீதியை அறிதல் இல்லாதவரும் அஞ்சுபவரும் ஆகியவரைப் பெற்றால், அவரைப் பகைத்தவர்க்கு, உயர்ந்த இன்பங்கள் எல்லாம் சென்று நீங்காமல் பொருந்தியிருக்கும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)பகை மாட்சி (Pakaimaatchi)