குறள் (Kural) - 862

குறள் (Kural) 862
குறள் #862
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு.

பொருள்
உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல், தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்?.

Tamil Transliteration
Anpilan Aandra Thunaiyilan Thaandhuvvaan
Enpariyum Edhilaan Thuppu.

மு.வரதராசனார்

ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதடனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்.

சாலமன் பாப்பையா

மக்களிடத்தில் அன்பு இல்லாத, வலுவான துணையும் இல்லாத, ஆற்றலும் அற்ற அரசின்மீது ஆற்றல் மிக்க பகை வந்தால், அப்பகையின் வலி‌மையை எப்படி அழிக்க முடியும்?.

கலைஞர்

உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல், தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்?.

பரிமேலழகர்

அன்பு இலன் - ஒருவன் தன் சுற்றத்தின்மேல் அன்பிலன்; ஆன்ற துணை இலன் - அதுவேயன்றி வலிய துணையிலன்; தான் துவ்வான் - அதன் மேல் தான் வலியிலன் : ஏதிலான் துப்பு என்பரியும் - அப்பெற்றியான்மேல் வந்த பகைவன் வலியினை யாங்ஙனம் தொலைக்கும்? (சுற்றமும் இருவகைத் துணையும் தன்வலியும் இலனாகலின், அவன்மேற் செல்வார்க்கு வலி வளர்வதன்றித் தொலையாது என்பதாம். துவ்வான் - துவ்வினைச் செய்யான்.)

புலியூர்க் கேசிகன்

தன் சுற்றத்தாரிடம் அன்பில்லாதவன், வலிய துணையில்லாதவன், தானும் வலிமையற்றவன், பகைவரது வலிமையை எவ்வாறு, எதனால் போக்க முடியும்?

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)பகை மாட்சி (Pakaimaatchi)