குறள் (Kural) - 856
இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.
பொருள்
மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி பெறுவது எளிது என எண்ணிச் செயல்படுபவரின் வாழ்க்கை விரைவில் தடம்புரண்டு கெட்டொழியும்.
Tamil Transliteration
Ikalin Mikalinidhu Enpavan Vaazhkkai
Thavalum Ketalum Naniththu.
மு.வரதராசனார்
இகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை தவறிபோதலும் அழிதலும் விரைவவில் உள்ளனவாம்.
சாலமன் பாப்பையா
பிறருடன் மனவேறுபாடு கொண்டு வளர்வது நல்லதே என்பவன் வாழ்க்கை, அழியாமல் இருப்பதும் சிறிது காலமே; அழிந்து போவதும் சிறிது காலத்திற்குள்ளேயாம்.
கலைஞர்
மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி பெறுவது எளிது என எண்ணிச் செயல்படுபவரின் வாழ்க்கை விரைவில் தடம்புரண்டு கெட்டொழியும்.
பரிமேலழகர்
இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை - பிறரொடு மாறுபடுதற்கண் மிகுதல் எனக்கு இனிது என்று அதனைச் செய்வானது உயிர் வாழ்க்கை; தவலும் கெடலும் நணித்து - பிழைத்தலும் முற்றக் கெடுதலும் சிறிது பொழுதுள் உளவாம். (மிகுதல் - மேன்மேல் ஊக்குதல். 'இனிது' என்பது தான் வேறல் குறித்தல். பிழைத்தல் - வறுமையான் இன்னாதாதல். முற்றக் கெடுதல் - இறத்தல். இவற்றால் 'நணித்து' என்பதனைத் தனித்தனி கூட்டி, உம்மைகளை எதிரதும் இறந்ததும் தழீஇய எச்சவும்மைகளாக உரைக்க. பொருட்கேடும் உயிர்க்கேடும் அப்பொழுதே உளவாம் என்பதாம்.)
புலியூர்க் கேசிகன்
‘பிறரோடு அவரினும் மிகுதியாக மாறுபடுதல் எனக்கு இனிது’ என்று, அதனைச் செய்பவனது உயிர்வாழ்க்கை, சிறுபொழுதிற்குள் பிழைத்தலும் கெடுதலும் ஆகிவிடும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | நட்பியல் (Natpiyal) |
அதிகாரம் (Adhigaram) | இகல் (Ikal) |