குறள் (Kural) - 851
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.
பொருள்
மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும்.
Tamil Transliteration
Ikalenpa Ellaa Uyirkkum Pakalennum
Panpinmai Paarikkum Noi.
மு.வரதராசனார்
எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீயப் பண்பை வளர்க்கும் நோய் இகழ் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர்.
சாலமன் பாப்பையா
எல்லா உயிர்களிடத்திலும் இணங்கிச் சேராமல் இருக்கும் தீய குணத்தை வளர்க்கும் நோயே, மனவேறுபாடு என்று கூறுவர்.
கலைஞர்
மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும்.
பரிமேலழகர்
எல்லா உயிர்க்கும் பகல் என்னும் பண்பு இன்மை பாரிக்கும் நோய் - எல்லா உயிர்கட்கும் பிறஉயிர்களோடு கூடாமை என்னும் தீக்குணத்தை வளர்க்கும் குற்றம்; இகல் என்ப - இகல் என்று சொல்லுவர் நூலோர்.(மக்களையும் விலங்குகளோடு ஒப்பிப்பது என்பது தோன்ற 'எல்லாஉயிர்க்கும்' என்றும், பகுதிக்குணத்தை இடைநின்றுவிளைத்தலின் 'பகல் என்னும் பண்பு இன்மை' என்றும்கூறினார். நற்குணம் இன்மை அருத்தாபத்தியால் தீக்குணமாயிற்று.இதனான் இகலது குற்றம் கூறப்பட்டது.)
புலியூர்க் கேசிகன்
எல்லா உயிர்களுக்கும், பிற உயிர்களோடு கூடாமை என்னும் தீய குணத்தை வளர்க்கும் குற்றம், ‘இகல்’ என்று பெரியோர்கள் சொல்லியுள்ளார்கள்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | நட்பியல் (Natpiyal) |
அதிகாரம் (Adhigaram) | இகல் (Ikal) |