குறள் (Kural) - 848

குறள் (Kural) 848
குறள் #848
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.

பொருள்
சொந்தப் புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரை விட்டு நீங்காத நோயாகும்.

Tamil Transliteration
Evavum Seykalaan Thaandheraan Avvuyir
Poom Alavumor Noi.

மு.வரதராசனார்

தனக்கு நன்மையானவற்றை பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும்.

சாலமன் பாப்பையா

அறிவற்றவன் பிறர் சொன்னாலும் செய்யமாட்டான்; தானாகவும் அறியமாட்டான்; அவனது உயிர் போகும் வரைக்கும் இப்பூமிக்கு அவன் ஒரு நோயே.

கலைஞர்

சொந்தப் புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரை விட்டு நீங்காத நோயாகும்.

பரிமேலழகர்

ஏவவும் செய்கலான் - புல்லறிவாளன் தனக்கு உறுதியாயவற்றை அறிவுடையார் சொல்லா நிற்கவும் செய்யான்; தான் தேறான் - அதுவன்றித் தானாகவும் இவை செய்வன என்று அறியான்; அவ்வுயிர் போமளவும் ஓர் நோய் - அவ்வுயிர் யாக்கையின் நீங்குமளவும் நிலத்திற்குப் பொறுத்தற்கு அரியதொரு நோயாம். (உயிர் தான் உணர்தல் தன்மைத்தாயிருந்தும், நின்ற யாக்கைவயத்தான் மருளல் தன்மைத்தாய் வேறுபடுதலின், 'அவ்வுயிர்' என்றும், அதன் நீங்கிய பொழுதே அதற்கு இரண்டனுள் ஒன்று கூடுதலின் 'போமளவும்' என்றும். குலமலை முதலிய பொறுக்கின்ற நிலத்திற்குப் பாவயாக்கை பெரும் பொறையாய்த் துன்பம் செய்தலின் 'ஓர் நோய்' என்றும் கூறினார்.)

புலியூர்க் கேசிகன்

அறிவுடையோர் ‘இன்னின்னபடி செய்க’ என்று ஏவிய போதும், அதன்படி செய்யமாட்டாதவன், தானும் தெளியாதவன், உயிர் போகுமளவும் துன்பம் அடைவான்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)புல்லறிவாண்மை (Pullarivaanmai)