குறள் (Kural) - 844

குறள் (Kural) 844
குறள் #844
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.

பொருள்
ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும்.

Tamil Transliteration
Venmai Enappatuva Thiyaadhenin Onmai
Utaiyamyaam Ennum Serukku.

மு.வரதராசனார்

புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துகொள்ளும் செருக்காகும்.

சாலமன் பாப்பையா

அறிவின்மை என்று சொல்லப்படுவது என்ன என்று கேட்டால், அது தம்மைத் தாமே நல அறிவு உடையவரென்று என்னும் மயக்கமே ஆகும்.

கலைஞர்

ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும்.

பரிமேலழகர்

844 வெண்மை எனப்படுவது யாது எனின் - புல்லறிவுடைமை என்று சொல்லப்படுவது யாது என்று வினவின்; யாம் ஒண்மை உடையம் என்னும் செருக்கு - அது தம்மைத் தாமே யாம் நல்லறிவுடையம் என்று நன்கு மதிக்கும் மயக்கம். (வெண்மையாவது அறிவு முதிராமை. ஒண்மை எனக் காரியப் பெயர் காரணத்திற்காயிற்று. உலகத்தார் இகழ்தல் அறிந்து வைத்தும் அவ்வாறு மதித்தலான், 'மயக்கம்' என்றார்.)

புலியூர்க் கேசிகன்

‘அறியாமை என்று சொல்லப்படுவது யாது?’ என்றால், அ·து, அறிவில்லாதவனும், ‘தான் அறிவுடையவன்’ என்று நினைத்துச் செருக்கு அடைதலாகும்!

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)புல்லறிவாண்மை (Pullarivaanmai)