குறள் (Kural) - 842

அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்.
பொருள்
அறிவில்லாத ஒருவன் வள்ளலைப்போல ஒரு பொருளை மகிழ்ச்சியுடன் வழங்குவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; அது அப்பொருளைப் பெறுகிறவன் பெற்றபேறு என்றுதான் கருதவேண்டும்.
Tamil Transliteration
Arivilaan Nenjuvandhu Eedhal Piridhiyaadhum
Illai Peruvaan Thavam.
மு.வரதராசனார்
அறிவில்லாதவவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்கு காரணம், வேறொன்றும் இல்லை, அப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்.
சாலமன் பாப்பையா
அறிவற்றவன் மனம் மகிழ்ந்து ஒன்றைப் பிறர்க்குத் தந்தால், அது பெறுகின்றவன் செய்த நல்வினையே.
கலைஞர்
அறிவில்லாத ஒருவன் வள்ளலைப்போல ஒரு பொருளை மகிழ்ச்சியுடன் வழங்குவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; அது அப்பொருளைப் பெறுகிறவன் பெற்றபேறு என்றுதான் கருதவேண்டும்.
பரிமேலழகர்
அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் - புல்லறிவுடையான் ஒருவனுக்கு மனம் உவந்து ஒன்று கொடுத்தல் கூடிற்றாயின்; பெறுவான் தவம் பிறிது யாதும் இல்லை - அதற்குக் காரணம் பெறுகின்றவன் நல்வினையே, வேறொன்றும் இல்லை. (ஒரோ வழி நெஞ்சு உவந்து ஈதல் கூடலின் 'புல்லறிவாளரும் நல்வினை செய்ப' என்பார்க்குப் 'பெறுவான் வீழ் பொருள் எய்தியான் போல்வதல்லது, இம்மை நோக்கியாக மறுமை நோக்கியாக ஈகின்றார் அல்லர்' எனக் கூறியவாறு. கூடிற்றாயின், அதற்குக் காரணம் என்னும் சொற்கள் அவாய் நிலையான் வந்தன. இதனான், அஃதுடையார் தம்மாட்டு நல்லன செய்தலறியாமை கூறப்பட்டது.)
புலியூர்க் கேசிகன்
அறிவில்லாத ஒருவன், மனமகிழ்ச்சியோடு ஒரு பொருளை ஒருவனுக்குத் தருவதென்பது, பெறுவானது தவத்தின் பயனே அல்லாமல், வேறு எதனாலும் இல்லை
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | நட்பியல் (Natpiyal) |
அதிகாரம் (Adhigaram) | புல்லறிவாண்மை (Pullarivaanmai) |