குறள் (Kural) - 84

குறள் (Kural) 84
குறள் #84
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.

பொருள்
மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.

Tamil Transliteration
Akanamarndhu Seyyaal Uraiyum Mukanamarndhu
Nalvirundhu Ompuvaan Il.

மு.வரதராசனார்

நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.

சாலமன் பாப்பையா

இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.

கலைஞர்

மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.

பரிமேலழகர்

செய்யாள் அகன் அமர்ந்து உறையும் - திருமகள் மனம் மகிழ்ந்து வாழாநிற்கும்; முகன் அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல் - முகம் இனியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவானது இல்லின்கண். (மனம் மகிழ்தற்குக் காரணம் தன் செல்வம் நல்வழிப்படுதல். தகுதி: ஞான ஒழுக்கங்களான் உயர்தல். பொருள் கிளைத்தற்குக் காரணம் கூறியவாறு.)

ஞா.தேவநேயப் பாவாணர்

முகன் அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல்-முக மலர்ந்து நல்ல விருந்தினரைப பேணுவானது இல்லத்தின்கண்; செய்யாள் அகன் அமர்ந்து உறையும்-திருமகள் மனமகிழ்ந்து வதிவாள். திருமகள் மனமகிழ்தல் செல்வம் நல்வழியிற் செலவிடப்படுதல் பற்றி. வதிதல்-நிலையாகத் தங்குதல் நல் விருந்தினர்-அறிவும் ஒழுக்கமும் தன்மானமும் உள்ளோர்.

மணக்குடவர்

திருவினாள் மனம்பொருந்தி உறையும்: நல்ல விருந்தினரை முகம் பொருந்திப் போற்றுவானது மனையின்கண். இது கேடின்மையன்றிச் செல்வமுமுண்டா மென்றது.

புலியூர்க் கேசிகன்

முகமலர்ச்சியோடு நன்முறையில் விருந்தினரைப் பேணுகிறவன் வீட்டிலே, உளமலர்ச்சியோடு திருமகள் அகலாது தங்கியிருப்பாள்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)விருந்தோம்பல் (Virundhompal)