குறள் (Kural) - 83
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.
பொருள்
விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை.
Tamil Transliteration
Varuvirundhu Vaikalum Ompuvaan Vaazhkkai
Paruvandhu Paazhpatudhal Indru.
மு.வரதராசனார்
தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.
சாலமன் பாப்பையா
நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.
கலைஞர்
விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை.
பரிமேலழகர்
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை - தன்னை நோக்கி வந்த விருந்தை நாள்தோறும் புறந்தருவானது இல்வாழ்க்கை; பருவந்து பாழ்படுதல் இன்று - நல்குரவான் வருந்திக்கெடுதல் இல்லை. (நாள்தோறும் விருந்தோம்புவானுக்கு அதனான் பொருள் தொலையாது; மேன்மேல் கிளைக்கும் என்பதாம்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
வைகலும் வருவிருந்து ஓம்புவான் வாழ்க்கை - நாள்தோறும் தன்னை நோக்கி வருகின்ற விருந்தினரைப் பேணுவானது இல்வாழ்க்கை; பருவந்து பாழ்படுதல் இன்று - வறுமையால் துன்புற்றுக்கெடுதல் இல்லை. இது நாட்டு வளத்தையும் இல்லறத்தானின் செல்வநிலையையும் பொறுத்தது.
மணக்குடவர்
நாடோறும் வந்தவிருந்தினரைப் போற்றுவானது ஆக்கம், வருத்தமுற்றுக் கேடுபடுவதில்லை.
புலியூர்க் கேசிகன்
நாள்தோறும் தன்னை நாடி வரும் விருந்தினரைப் போற்றுகிறவனுடைய இல்வாழ்க்கை துன்பத்தால் பாழ்படுதல் என்றும் இல்லையாகும்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | விருந்தோம்பல் (Virundhompal) |