குறள் (Kural) - 826

குறள் (Kural) 826
குறள் #826
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.

பொருள்
பகைவர், நண்பரைப்போல இனிமையாகப் பேசினாலும் அந்தச் சொற்களில் கிடக்கும் சிறுமைக் குணம் வெளிப்பட்டே தீரும்.

Tamil Transliteration
Nattaarpol Nallavai Sollinum Ottaarsol
Ollai Unarap Patum.

மு.வரதராசனார்

நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்னபோதிலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும்.

சாலமன் பாப்பையா

நண்பர்களைப் போல், நன்மை தருவனவற்றைச் சொன்னாலும், நம்மோடு மனத்தால் கூடாதவர்களின் சொற்கள் நன்மை தராதனவே என்று விரைவில் அறிந்து கொள்ளலாம்.

கலைஞர்

பகைவர், நண்பரைப்போல இனிமையாகப் பேசினாலும் அந்தச் சொற்களில் கிடக்கும் சிறுமைக் குணம் வெளிப்பட்டே தீரும்.

பரிமேலழகர்

நட்டார்போல் நல்லவை சொல்லினும் - நட்டார் போன்று நன்மை பயக்கும் சொற்களைச் சொன்னாராயினும்; ஒட்டார் சொல் 'ஒல்லை உணரப்படும்' - பகைவர் சொற்கள் அது பயவாமை அச்சொல்லிய பொழுதே அறியப்படும். ('சொல்லினும்' எனவே, சொல்லாமையே பெற்றாம். ஒட்டாராதலால் தீமை பயத்தல் ஒருதலை என்பார், 'ஒல்லை உணரப்படும்' என்றார்.)

புலியூர்க் கேசிகன்

நம்மிடம் பேசும் போது நமக்கு நண்பரைப் போலவே நல்ல பேச்சுகளைச் சொன்னாலும், நம்மோடு ஒட்டாதவரின் வஞ்சகத்தை விரைவிலேயே அறிந்துவிடலாம்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)கூடா நட்பு (Kootaanatpu)