குறள் (Kural) - 823

பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.
பொருள்
 அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், பகையுணர்வு படைத்தோர் மனம் திருந்தி நடப்பதென்பது அரிதான காரியமாகும்.
Tamil Transliteration
 Palanalla Katrak  Kataiththu  Mananallar
Aakudhal  Maanaark  Karidhu.
மு.வரதராசனார்
பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், (உள்ளன்பினால்) மாட்சியடையாதவர்க்கு இல்லை.
சாலமன் பாப்பையா
மனத்தால் பொருந்தாதவர்கள் நல்ல பல நூல்களைக் கற்றபோதும் மனந்திருந்தி நல்ல நண்பர் ஆவது அரிது.
கலைஞர்
அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், பகையுணர்வு படைத்தோர் மனம் திருந்தி நடப்பதென்பது அரிதான காரியமாகும்.
பரிமேலழகர்
நல்ல பல கற்றக் கடைத்தும் - நல்லன பல நூல்களைக் கற்ற விடத்தும்; மனம் நல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது - அதனான் மனம் திருந்தி நட்பாதல் பகைவர்க்கு இல்லை. (நல்லன - மனக் குற்றம் கெடுப்பன. 'மனம் நல்லர்' எனச் சினைவினை முதன்மேல் நின்றது. நல்லர் ஆகுதல் - செற்றம் விடுதல். 'உள்ளே செற்றமுடையாரைக் கல்வியுடைமை பற்றி நட்பு என்று கருதற்க' என்பதாம்.)
புலியூர்க் கேசிகன்
பலவான நல்ல அறநூல்களை எல்லாம் கற்றிருந்தாலும், தம் மனத்திலே நல்ல பண்பினர் ஆகுதல் என்பது, பெருந்தன்மைப் பண்பு இல்லாதவருக்கு அரிய செயலாகும்
| பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) | 
|---|---|
| இயல் (Iyal) | நட்பியல் (Natpiyal) | 
| அதிகாரம் (Adhigaram) | கூடா நட்பு (Kootaanatpu) |