குறள் (Kural) - 813

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.
பொருள்
பயனை எண்ணிப்பார்த்து அதற்காகவே நட்புக் கொள்பவரும், விலைமகளிரும், கள்வரும் ஆகிய இந்த மூவரும் ஒரே மாதிரியானவர்களே ஆவார்கள்.
Tamil Transliteration
Uruvadhu Seerdhookkum Natpum Peruvadhu
Kolvaarum Kalvarum Ner.
மு.வரதராசனார்
கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலை மகளிரும், கள்வரும் ஒரு நிகரானவர்.
சாலமன் பாப்பையா
இவரிடம் நட்புக் கொள்வதால் தமக்கு என்ன கிடைக்கும் என்று எண்ணிப் பார்ப்பவரின் நட்பும், தமக்குத் தரும் கூலியை ஏற்றுக் கொள்ளும் பாலியல் தொழிலாளரும் திருடர்களும் ஒருவருக்கொருவர் சமமானவர்களே.
கலைஞர்
பயனை எண்ணிப்பார்த்து அதற்காகவே நட்புக் கொள்பவரும், விலைமகளிரும், கள்வரும் ஆகிய இந்த மூவரும் ஒரே மாதிரியானவர்களே ஆவார்கள்.
பரிமேலழகர்
உறுவது சீர் தூக்கும் நட்பும் - நட்பு அளவு பாராது அதனால் வரும் பயனளவு பார்க்கும் நட்டாரும்; பெறுவது கொள்வாரும் - கொடுப்பாரைக் கொள்ளாது விலையைக் கொள்ளும் பொதுமகளிரும்; கள்வரும் - பிறர்கேடு நோக்காது அவர் சோர்வு நோக்கும் கள்வரும்; நேர் - தம்முள் ஒப்பர்.(நட்பு - ஆகுபெயர். பொருளையே குறித்து வஞ்சித்து ஒழுகலின் கணிகையர் கள்வர் என்றிவரோடு ஒப்பர் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் தமககு உறுவது பார்ப்பார் நட்பின் தீமை கூறப்பட்டது.)
புலியூர்க் கேசிகன்
தாம் அடைவதையே சீர்தூக்கிப் பார்த்திருக்கும் நட்பும், தாம் பெறுவதைக் கொள்ளும் விலைமகளிரும், நம் பொருளைக் களவாடும் கள்வரும், ஒரே தன்மையினரே
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | நட்பியல் (Natpiyal) |
அதிகாரம் (Adhigaram) | தீ நட்பு (Thee Natpu) |